தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பயன் பெற்று வரும் குடும்ப அட்டைதாரர்கள் விடுபட்ட கைரேகை மற்றும் கண் கருவிழி பதிவுகளை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் வருகிற செப்டம்பர் 19 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று வரும் முன்னுரிமை (PHH) மற்றும் முன்னுரிமையற்ற (NPHH) குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில், இதுநாள் வரை கைரேகை அல்லது கண் கருவிழி ரேகையைப் பதிவு செய்யாதவர்கள் இச்சிறப்பு முகாமில் தங்களது பதிவுகளைச் செய்து கொள்ளலாம்.
வெளியூர் அல்லது வெளி மாவட்டங்களில் தங்கிப் பணியாற்றி வரும் நபர்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள், தாங்கள் தற்போது வசித்து வரும் ஊர் அல்லது மாவட்டத்திலுள்ள அருகாமையில் உள்ள ஏதேனும் ஒரு நியாயவிலைக் கடைக்குத் தங்களது குடும்ப அட்டையுடன் நேரில் சென்று தங்களது ரேகைகளைப் பதிவு செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் இச்சிறப்பு வாய்ப்பினைப் பயன்படுத்தித் தங்களது கைரேகை மற்றும் கண் கருவிழி ரேகை விவரங்களை நேரில் சென்று பதிவு செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரசின் சலுகைகளைத் தொடர்ந்து பெறத் தங்களது முழு ஒத்துழைப்பை நல்குமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

