» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய எல்லையில முழுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: அமித் ஷா

சனி 2, டிசம்பர் 2023 4:36:34 PM (IST)

பாகிஸ்தான், வங்கதேசத்துடனான இந்தியாவின் எல்லைகளில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் அனைத்து இடைவெளிகளும் அடைக்கப்பட்டு, முழுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா  தெரிவித்ததுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 2,290 கி.மீ. சர்வதேச எல்லை மற்றும் இந்தியா-வங்கதேசம் இடையிலான 4,096 கி.மீ. எல்லையில் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் வேலி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த எல்லைகள் நீண்ட ஆறுகள், மலைப் பகுதிகள் மற்றும் சதுப்பு நிலங்களை உள்ளடக்கியதாகும். இதுபோன்ற பகுதிகளில் வேலி அமைப்பது கடினம் என்பதால், ஊடுருவலைத் தடுக்க தொழில்நுட்ப சாதனங்கள் பொருத்தப்படுகின்றன.

எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) 59-வது நிறுவன தினத்தையொட்டி, ஜாா்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பின் அவர் அங்கு உரையாற்றினார்.

"மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய-பாகிஸ்தான் எல்லை மற்றும் இந்திய-வங்கதேச எல்லையில் சுமாா் 560 கி.மீ. தொலைவுக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 60 கி.மீ. தொலைவுக்கே வேலி அமைக்கும் பணிகள் எஞ்சியுள்ளன. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இவ்விரு எல்லைகளிலும் அனைத்து இடைவெளிகளும் அடைக்கப்பட்டு, முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்படும். 

இதன்மூலம் ஊடுருவலும் எல்லை தாண்டிய கடத்தலும் முழுமையாகத் தடுக்கப்படும். எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால், நாடு வளா்ச்சியடையவோ அல்லது செழிப்படையவோ முடியாது. நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பிஎஸ்எஃப் போன்ற படைகளால், இவை அனைத்தும் சாத்தியமாகின. துணிச்சல் மிக்க பிஎஸ்எஃப் படை, நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் முக்கியத் தூணாக விளங்குகிறது.

மோடி தலைமையிலான அரசு, எல்லைப் பாதுகாப்பு, வளா்ச்சி மற்றும் ஜனநாயக நடைமுறைகளை ஒருங்கிணைத்து, எல்லைப் பகுதிகளில் வலுவான உள்கட்டமைப்பு மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. எல்லைப் பகுதிகளில் ரயில் போக்குவரத்து, சாலைகள், நீா்வழிப் பாதைகள், தொலைத்தொடா்பு வசதி, மக்கள்ரீதியிலான தொடா்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. 

எல்லைப் பகுதிகளில் 11,000 கி.மீ. தொலைவுக்கு உயர்கோபுர மின்விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. புதிதாக 452 எல்லைச் சாவடிகள், 510 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 637 எல்லைச் சாவடிகளுக்கு மின்இணைப்பும், சுமார் 500 எல்லைச் சாவடிகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory