» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குருவாயூரில் யானைகளை பாகன்கள் தாக்கிய விவகாரம் : உயர்நீதிமன்றம் கண்டனம்!
சனி 10, பிப்ரவரி 2024 10:54:48 AM (IST)
குருவாயூர் கோவில் யானைகளை பாகன்கள் தாக்கிய சம்பவத்தில் கேரள உயர்நீதிமன்ற தாமாக முன்வந்து வழக்குப் பதிந்துள்ளது.
கேரள மாநிலம், குருவாயூர் ஆலயத்திற்கு சொந்தமான யானைகள் மையம் ஒன்று குருவாயூர் கோவிலின் அருகே உள்ள மம்மியூர் பகுதியில் உள்ளது . இந்த யானை பராமரிப்பு மையம் யானைக் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இந்த யானைக் கோட்டையில் 30க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பராமரிக்கும் இரு யானைப் பாகன்கள் யானைகளை அடித்து உதைப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியானது.
இது குறித்து சமூக வலைதளங்களில் ஒரு பாகன் இரண்டு யானைகளை அடிக்கும் காட்சிகள் வெளியானது. மேலும் அங்குள்ள சிவன் என்ற யானையை பாகன்கள் தாக்குவது வீடியோவாக வெளியாகியிருந்தது. இது கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இது தொடர்பாக கேரளா உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. சம்பவத்தை அடுத்து குருவாயூர் தேவசம் போர்டு அதிகாரிகள் இந்த யானைகளை அடித்த இரண்டு பாகன்களை சஸ்பென்ட் செய்து அவர்கள் மீது விசாரணை நடத்தி வருகின்றனர் .
தற்போது இது குறித்து தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த கேரள உயர்நீதிமன்ற தேவசம் போர்டு நீதிபதி அணில் கே நரேந்திரன் குருவாயூர் தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், யானைக் கோட்டையில் நடைபெறும் அக்கிரம செயல்கள் தேவசம் போர்டுக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் யானைகளை துன்புறுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் ஆலயங்களில் பராமரிக்கும் யானைகள் முறைப்படி பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் .
மேலும் இதுகுறித்து குருவாயூர் தேவசம் போர்டு அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக அங்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் . அத்துடன் கேரள வனத்துறை தலைமை அதிகாரிக்கு அளித்துள்ள உத்தரவில் யானைக் கோட்டைக்கு சென்று அங்கு நடைபெறும் செயல்களை கண்டறிந்து அறிக்கை தருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிருஷ்ணா என்ற யானையை தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குருவாயூர் கோவிலுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.