» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியா - சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்: பிரதமர் மோடி பேட்டி
வியாழன் 11, ஏப்ரல் 2024 4:12:26 PM (IST)
இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்'', என பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நியூஸ்விக் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவைப் பொறுத்தவரை சீனா உடனான உறவு முக்கியமானது. இரு தரப்பு உறவில் உள்ள அசாதாரணத்தை பின்னுக்கு தள்ள, நமது எல்லையில் நீடித்து வரும் பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும் என நான் நம்புகிறேன்.
இந்தியா - சீனா இடையே நிலையான மற்றும் அமைதியான உறவு இரு நாடுகளுக்கு மட்டும் முக்கியமானது அல்ல. ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும், உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. ராஜதந்திர மற்றும் ராணுவ மட்டங்களில் நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான இருதரப்பு ஈடுபாட்டின் மூலம் நமது எல்லைகளில் அமைதியை மீட்டெடுக்கவும், நிலைநிறுத்தவும் முடியும் என்று நம்புகிறேன்.
இந்த பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் பகவான் ஸ்ரீராமரின் பெயரே எதிரொலிக்கிறது. அயோத்தி ராமர் கோயில் பல நூற்றாண்டுகளின் விடாமுயற்சி மற்றும் தியாகத்தின் உச்சம். இந்தியாவின் தேசிய உணர்வில் ராமரின் பெயர் பதிந்துள்ளது. கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும்படி என்னை கேட்ட போதே 140 கோடி மக்களை நான் பிரதிநிதிப்படுத்துவேன் என்று எனக்கு தெரியும். ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இரண்டாவது தீபாவளியைப் போன்று கொண்டாட்டமாக நாட்டை ஒருங்கிணைத்தது. ஒவ்வொரு வீட்டிலும் ஒளி வீசியது. அது ராம் ஜோதியின் ஒளி.
பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத சூழ்நிலையிலேயே அமைதியை மேம்படுத்த முடியும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது உள்ளிட்ட அந்நாட்டின் உள் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
காஷ்மீர் மண்ணில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்து நீங்களே நேரில் பாருங்கள். வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் மக்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகிய செயல்முறைகள் அங்கு செயல்படுத்துவதைக் காண வேண்டும். காஷ்மீரின் மக்கள் அமைதியின் பலனை தற்போது அறுவடை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு 2.1 கோடி சுற்றுலா பயணிகள் காஷ்மீர் வந்துள்ளனர். பயங்கரவாத சம்பவங்கள் அங்கு கணிசமாக குறைந்துள்ளன. ஒரு காலத்தில் கல்வீச்சு, பந்த் சம்பவங்கள் காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தன. தற்போது அவை கடந்த கால விஷயமாக மாறிவிட்டன. இவ்வாறு அந்த பேட்டியில் பிரதமர் மோடி கூறினார்.