» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோவேக்சின் தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வு தவறானது: ஐசிஎம்ஆர் விளக்கம்

செவ்வாய் 21, மே 2024 8:30:28 AM (IST)

கோவேக்சின் தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வு தவறானது என இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ICMR ) கூறியுள்ளது.

கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசி கோவேக்சின். இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் ஓராண்டாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட 635 இளம் பருவத்தினர் மற்றும் 291 பெரியவர்கள் என 926 பேரிடம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

இதில் 3-ல் ஒரு பங்கினருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது. குறிப்பாக சுவாச கோளாறு, தோல் மற்றும் தோலடி நோய்கள், நரம்பு மண்டல கோளாறுகள், பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டதாக ஸ்பிரிங்கர் நேச்சர் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டு இருந்தது.

ஏற்கனவே கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்க விளைவுகள் ஏற்படுவதாக அதன் தயாரிப்பு நிறுவனம் கூறியிருந்த நிலையில், கோவேக்சின் தடுப்பூசியும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று வெளியான தகவல் நாடு முழுவதும் கடுமையான அதிர்வலைகளை கிளப்பி இருந்தது. ஆனால் பனாரஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தவறானது என இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) கூறியுள்ளது.

இந்த ஆய்வு முடிவுக்கு ஐ.சி.எம்.ஆர். வழங்கியிருப்பதாக கூறப்படும் ஒப்புதலை உடனடியாக நீக்குமாறு ஆய்வு முடிவு வெளியிடப்பட்ட இதழின் ஆசிரியருக்கு ஐ.சி.எம்.ஆர். இயக்குனர் டாக்டர் ராஜீவ் பால் கடிதம் அனுப்பி உள்ளார். மேலும் திருத்தச்செய்தி ஒன்று வெளியிட வேண்டும் என்றும் அதில் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த கடிதத்தில் மேலும் அவர் கூறியிருப்பதாவது: கோவேக்சின் தடுப்பூசி பக்க விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஐ.சி.எம்.ஆர். இணையவில்லை. இந்த ஆய்வுக்கு எந்தவித பண உதவியோ, தொழில்நுட்ப உதவிகளோ வழங்கவும் இல்லை.

ஐ.சி.எம்.ஆரிடம் இருந்து எந்தவித முன் அனுமதியோ அல்லது அறிவிப்போ வழங்காமல் ஆராய்ச்சி நடத்தப்பட்டு உள்ளது. இது பொருத்தமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பல்வேறு குறைபாடுகள் கொண்ட மற்றும் தவறான இந்த ஆய்வுடன் ஐ.சி.எம்.ஆர்.ஐ. தொடர்புபடுத்த முடியாது.

தடுப்பூசி போடப்பட்ட மற்றும் போடப்படாத குழுக்களுக்கு இடையிலான நிகழ்வுகளின் விகிதங்களை ஒப்பிடுவதற்கு, தடுப்பூசி போடப்படாத நபர்களின் தகவல்கள் ஆய்வில் இல்லை. எனவே, ஆய்வில் தெரிவிக்கப்பட்ட முடிவுகளை தடுப்பூசியுடன் இணைக்கவோ அல்லது காரணமாகக் கூறவோ முடியாது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் அடிப்படை தகவல் இல்லை. மேலும் தடுப்பூசிக்குப் பிந்தைய காலத்தில் கவனிக்கப்பட்ட பக்க விளைவுகளின் நிகழ்வுகளில் ஏற்படும் மாற்றத்தை மதிப்பிட முடியாது.

தரவு சேகரிப்பு முறையானது சார்பு நிலைக்கு அதிக ஆபத்து உள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் டாக்டர் பரிசோதனை அல்லது சிகிச்சை ஆவணங்கள் மூலமான எத்தகைய உறுதிப்படுத்தலும் இன்றி ஒரு வருடமாக தொலைபேசி மூலமாக தரவுகள் சேர்க்கப்பட்டு உள்ளன.

எனவே இந்த கட்டுரையில் ஐ.சி.எம்.ஆர். ஒப்புதலை உடனடியாக நீக்கி திருத்த செய்தி வெளியிட வேண்டும். மேலும் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். தவறினால் சட்ட மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து ஐ.சி.எம்.ஆர். முடிவு செய்யும். இவ்வாறு டாக்டர் ராஜீவ் பால் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory