» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டிஜிட்டல் கைது என்ற பெயரில் ஏமாற்றுவேலை நடக்கிறது: பிரதமர் மோடி எச்சரிக்கை

திங்கள் 28, அக்டோபர் 2024 8:20:18 AM (IST)

டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் ஏமாற்றுவேலை நடக்கிறது. மோசடியாளர்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.

பிரதமர் மோடி, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பேசி வருகிறார். நேற்று அதன் 115-வது நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அவர் பேசியதாவது: நண்பர்களே. ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் ஏமாற்றுவேலை நடந்து வருகிறது. சட்டத்தில், ‘டிஜிட்டல் கைது’ என்ற ஒன்று கிடையாது.

அது வெறும் மோசடி, ஏமாற்றுவேலை, பொய். குற்றவாளிகள் கும்பல் இதில் ஈடுபட்டு வருகிறது. இந்த காரியத்தை செய்பவர்கள் சமுதாயத்தின் எதிரிகள். இந்த ஆன்லைன் மோசடியாளர்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரிலான மோசடியை ஒடுக்க மாநில அரசுகளுடன் அனைத்து விசாரணை அமைப்புகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் இதுபற்றிய புகார்களை இணையவழி குற்ற தடுப்புக்கான உதவிமைய எண் ‘1930’-ல் தொடர்பு ெகாண்டு தெரிவிக்கலாம். அல்லது சைபர்கிரைம் இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம். இத்தகைய மோசடிகளை கூட்டு முயற்சிகள் மூலம்தான் முறியடிக்க முடியும். இணையவழி குற்றங்களுக்கு எதிரான பிரசாரத்தில் பள்ளிகளும், கல்லூரிகளும் தங்கள் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

‘தற்சார்பு இந்தியா’ என்ற இலக்கு நமது கொள்கையாக மட்டுமின்றி, நமது உணர்வாகவும் மாறிவிட்டது. ஆசியாவின் மிகப்பெரிய இமேஜிங் தொலைநோக்கியான ‘மேசி’, லடாக்கில் 4 ஆயிரத்து 300 மீட்டர் உயர பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.

அது தொலைதூரத்தில் உள்ளதையும் பார்க்க உதவுகிறது. தற்சார்பு இந்தியாவின் வலிமையை அது நமக்கு உணர்த்துகிறது. இந்த பண்டிகை காலத்தில், ‘தற்சார்பு இந்தியா’ பிரசாரத்தை பொதுமக்கள் வலுப்படுத்த வேண்டும்.

உள்ளூர் தயாரிப்புகளையே நாம் வாங்க வேண்டும். இது புதிய இந்தியா. ‘மேக் இன் இந்தியா’ தற்போது ‘உலகத்துக்காக உற்பத்தி செய்’ என்று ஆகிவிட்டது. நாம் இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றுவது மட்டுமின்றி, புதுமை கண்டுபிடிப்புகளின் உலகளாவிய மையமாக மாற்ற வேண்டும்.

தற்போது, இந்தியாவில் அனிமேஷன் துறை வளர்ந்து வருகிறது. அனிமேஷன் துறையின் உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்ற நாம் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனிமேஷன் ஸ்டுடியோக்கள், உலகப்புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இன்று நமது கலாசாரத்தை பிரதிபலிக்கும் அசல் இந்திய படைப்புகளை நமது இளைஞர்கள் உருவாக்கி வருகிறார்கள்.

அனிமேஷன் துறை, தொழில் வடிவம் எடுத்துள்ளது. அது, இதர தொழில்களுக்கு வலிமை அளிக்கிறது. அதுபோல், காட்சிவழி சுற்றுலா பிரபலம் அடைந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory