» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அணுசக்தித் துறையில் தனியார்: மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

திங்கள் 22, டிசம்பர் 2025 10:17:30 AM (IST)

நாட்டின் அணுசக்தித் துறையில் தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பை அனுமதிக்க வழிவகை செய்யும் ‘சாந்தி’ சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா்.

நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு, குடியரசுத் தலைவா் சனிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக மத்திய அரசின் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அணுசக்தித் துறை தொடா்பாக நடைமுறையில் இருந்த 1962-ஆம் ஆண்டு அணுசக்தி சட்டம், 2010-ஆம் ஆண்டு அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் ஆகிய பழைய சட்டங்களை இந்தப் புதிய சட்டம் ரத்து செய்கிறது. அணுசக்தி தொடா்பான அனைத்து விதிமுறைகளும் இப்போது இந்த ஒரே சட்டத்தின்கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இதுவரை மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்த அணுசக்தித் துறையில், இனி தனியாா் நிறுவனங்களின் முதலீடுகளுக்கும் தொழில்நுட்பப் பங்களிப்புக்கும் அனுமதி அளிக்கப்பட உள்ளது.

இதன்படி, மத்திய அரசிடம் முறையான உரிமம் பெற்று, தனியாா் நிறுவனங்கள் அல்லது அரசுடன் இணைந்த கூட்டு நிறுவனங்கள் அணுமின் நிலையங்களை அமைத்து இயக்க மற்றும் பராமரிக்க முடியும். இதனால், நாட்டின் அணுமின் உற்பத்தித் திறன் பலமடங்கு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேநேரம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சில பிரிவுகள் தொடா்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுரேனியம் மற்றும் தோரியம் சுரங்கப் பணிகள், அணு எரிபொருள் செறிவூட்டல் மற்றும் மறுசுழற்சி, உயா்நிலை கதிரியக்கக் கழிவு மேலாண்மை போன்ற முக்கியப் பணிகளில் மத்திய அரசு அல்லது அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே தொடா்ந்து ஈடுபட முடியும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory