» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மராட்டிய சட்டசபையில் 57 ஆண்டுகளுக்கு பிறகு பிரதான எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலை!

திங்கள் 25, நவம்பர் 2024 8:42:32 AM (IST)

மராட்டிய சட்டசபையில் சுமார் 57 ஆண்டுகளுக்கு பிறகு  பிரதான எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலை உருவாகி உள்ளது.

மராட்டிய சட்டசபை தேர்தல் கடந்த 20-ந் தேதி நடந்தது. தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான மகாயுதி கூட்டணி மற்றும் காங்கிரஸ், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றது. அந்த கூட்டணி மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களை கைப்பற்றி மெகா வெற்றி பெற்றது. பா.ஜனதா 132 தொகுதிகளிலும், சிவசேனா 57, தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

மகாவிகாஸ் அகாடி கூட்டணியால் 46 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அந்த கூட்டணியில் அதிகபட்சமாக உத்தவ் சிவசேனா 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சிகளுக்கு முறையே 16, 10 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஒட்டுமொத்தமாக இந்த கூட்டணி 50 இடங்களை கூட தாண்டவில்லை.

நாடாளுமன்றம் அல்லது சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக ஒருவரை தேர்வு செய்ய, தேர்தலில் அவரது கட்சி குறைந்தபட்சம் 10 சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். 288 சட்டசபை தொகுதிகள் உள்ள மராட்டியத்தில் ஒரு கட்சி 28 தொகுதிகளில் குறைந்தபட்சம் வெற்றி பெற்று இருந்தால் மட்டுமே எதிர்க்கட்சி தலைவா் பதவியை உரிமை கோர முடியும். ஆனால் எதிர்க்கட்சி கூட்டணியில் எந்த கட்சிக்கும் 10 சதவீத தொகுதிகளில் கூட வெற்றி கிடைக்கவில்லை. 

இதன் காரணமாக சுமார் 57 ஆண்டுகளுக்கு பிறகு மராட்டிய சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கு முன் 1962, 1967-ல் மராட்டியத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய தேர்தல் வெற்றியை பெற்றது. அந்த நேரத்தில் சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி தலைவர் இல்லாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து முன்னாள் சட்டசபை முதன்மை செயலாளர் ஆனந்த் கல்சே கூறுகையில், "மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை சட்டத்தின் கீழ், ஒரு கட்சி 10 சதவீத எம்.எல்.ஏ.க்களை பெற்று இருந்தால் மட்டுமே அந்த கட்சியை சேர்ந்தவரை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்ய முடியும். 288 எம்.எல்.ஏ.க்கள் உள்ள மராட்டிய சட்டசபையில் ஆட்சியில் பங்கு பெறாத 28 எம்.எல்.ஏ.க்கள் உள்ள கட்சி மட்டுமே எதிர்க்கட்சி பதவியை உரிமை கோர முடியும்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory