» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பயன்படுத்தப்பட்ட சிறிய கார்களுக்கு 18% வரி : ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு
சனி 21, டிசம்பர் 2024 5:14:17 PM (IST)
பயன்படுத்தப்பட்ட சிறிய கார்களுக்கான ஜிஎஸ்டியை 12% இல் இருந்து 18% ஆக உயர்த்த கவுன்சில் முடிவு செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பாப்கார்னுக்கு 18% வரை வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பேக்கேஜ் செய்யப்படாத உப்பு மற்றும் பெப்பர் பாப்கார்னுக்கு 5% வரியும், பேக்கேஜ் செய்யப்பட்டு லேபிளிடப்பட்ட பாப்கார்னுக்கு 12% வரியும், கேரமல் வகை பாப்கார்னுக்கு 18% வரியும் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் பயன்படுத்தப்பட்ட சிறிய கார்களுக்கான ஜிஎஸ்டியை 12% இல் இருந்து 18% ஆக உயர்த்த கவுன்சில் முடிவு செய்துள்ளது.
இதனிடையே இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலில் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கான தவணை தொகை மீதான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படாமல் இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைந்தது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, ஜனவரி மாதம் கூடி விவாதித்து ஒருமித்த கருத்தை எட்டிய பின்னரே இதில் முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.