» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜெ.சொத்துகளுக்கு உரிமை கோரிய ஜெ.தீபாவின் மனு தள்ளுபடி: கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 14, ஜனவரி 2025 10:15:27 AM (IST)

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு உரிமை கோரிய ஜெ.தீபாவின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதில் பெங்களூரு தனிக்கோர்ட்டின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.

இதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு வந்தபோது ஜெயலலிதா ஏற்கனவே மரணம் அடைந்ததை அடுத்து தீர்ப்பில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது.

சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்தனர். இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுமாறு கோரினார். 

இதற்கிடையே ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு உரிமை கோரி அவரது அண்ணன் மகளான ஜெ.தீபா சார்பில் அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தான் ஜெயலலிதாவின் வாரிசு என்பதால் அவரது சொத்துக்கள் தனக்கு சொந்தமானவை என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நரசிம்மமூர்த்தியின் மனுவை விசாரித்த நீதிபதி மோகன், ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறும், அதை ஏலம் விட்டு அபராதத்தை செலுத்த வேண்டும் என்றும், அதில் இருந்து இந்த வழக்கு செலவு தொகையை கர்நாடக அரசுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதாவது கடந்த ஆண்டு (2024) மார்ச் 6, 7-ந் தேதிகளில் ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஜெயலலிதாவின் பொருட்களை பெற தமிழக உள்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரி ஆகியோர் வர இருந்தனர். சிறப்பு கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவின் உறவினர் ஜெ.தீபா, கர்நாடக ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். பெங்களூரு சிறப்பு கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யுமாறும், ஜெயலலிதாவின் பொருட்களை தன்னிடம் ஒப்படைக்குமாறும் கோரினார்.

இந்த மனு மீது கடந்த 10 மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் ஜெ.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஸ்ரீசானந்தா உத்தரவிட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில், ஜெயலலிதாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதால், ஜெ.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி ஸ்ரீசானந்தா குறிப்பிட்டுள்ளார். மனுதாரர் சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை அடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பொங்கல் பண்டிக்கை முடிவடைந்த பிறகு அடுத்த வாரம் பெங்களூரு சிறப்பு கோர்ட்டை அணுகி ஐகோர்ட்டின் உத்தரவு நகலை வழங்க உள்ளனர். அதன் பிறகு கர்நாடக அரசிடம் உள்ள ஜெயலலிதாவின் 29 கிலோ தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் 1,500 ஏக்கர் நிலம் தொடர்புப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுவரை சுமார் 900 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு அறிக்கை தயாரித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி புகழ்வேந்தன் கூறுகையில், " கர்நாடக ஐகோர்ட்டு ஜெ.தீபா மனுவை தள்ளுபடி செய்துள்ளதால் நாங்கள் பொங்கல் பண்டிகை முடிவடைந்ததும் பெங்களூரு சிறப்பு கோர்ட்டை அணுக உள்ளோம். அங்கு ஜெயலலிதாவின் நகைகள், சொத்துக்கள் கர்நாடக அரசிடம் இருந்து பெறப்படும். ஜெயலலிதாவுக்கு சொந்தமான 1,500 ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்ய வேண்டும். இதில் நாங்கள் இதுவரை 900 ஏக்கர் நிலம் அடையாளம் கண்டுள்ளோம். மீதமுள்ள நிலங்கள் அரசு சொத்துக்கள், புறம்போக்கு நிலங்களாக உள்ளன" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory