» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிராவில் இந்தியை திணித்தால் போராட்டம் வெடிக்கும்: ராஜ் தாக்கரே எச்சரிக்கை

வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:38:39 PM (IST)

மகாராஷ்டிராவை இந்தி மயமாக்க விரும்பினால் போராட்டம் வெடிக்கும் என்று நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பாஜ, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஒன்றிய அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதலே 3வது மொழிப்பாடமாக இந்தி கட்டாயம் கற்பிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. முன்பு, மும்மொழி கொள்கை இடைநிலை கல்வி முதல் அமல்படுத்தப்பட்டு வந்தது. இப்போது மராத்தி, ஆங்கில வழி பள்ளிகள் அனைத்திலும் 1ம் வகுப்பு முதலே இந்தி கற்பிக்க வேண்டும். மராத்தி, ஆங்கிலத்தை தவிர்த்து இது மாணவர்களுக்கு 3வது மொழியாக இருக்கும்.

தேசிய கல்வி கொள்கை 5+3+3+4 என்ற புதிய கல்வி அமைப்பை முன்மொழிகிறது. முதல் 5 வருடம் அடித்தள கல்வி, 3 வருடம் ஆயத்த படிப்பு, அடுத்த 3 வருடம் நடுநிலை கல்வி மற்றும் 4 வருடங்கள் இடைநிலை கல்வி என 4 கட்டங்களாக கல்வியை கற்பிக்க முன்மொழிகிறது. அதனடிப்படையில், ஆரம்ப கல்வியில் மாற்றத்தை கொண்டு வரும் விதமாக மகாராஷ்டிர அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மாநில அரசின் இந்த முடிவுக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும், மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் சமூகவலைதளத்தில், ‘இந்தியை 5ம் வகுப்பு வரை கட்டாயமொழி பாடமாக்குவதை பொறுத்து கொள்ள மாட்டோம். 

அனைத்திலும் இந்தி என்ற மத்திய அரசின் முடிவை அனுமதிக்க முடியாது. இந்தி தேசியமொழி அல்ல. அது நாட்டில் உள்ள மற்ற மொழிகளை போல் ஒரு மாநில மொழியே. அதை ஏன் மகாராஷ்டிராவில் தொடக்க கல்வியில் கற்பிக்க வேண்டும். நாங்கள் இந்துக்கள்தான் ஆனால் இந்திக்காரர்கள் அல்ல. மாநிலத்தை இந்திமயமாக்க விரும்பினால் போராட்டம் வெடிக்கும்’ என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory