» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தி திணிப்புக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்!
சனி 5, ஜூலை 2025 3:58:09 PM (IST)

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் ஒன்றாக இணைந்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினர்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் தலைமையிலான, பாஜக - சிவ சேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு, சமீபத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. 3-வது மொழியாக இந்தி மொழி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா (உத்தவ் பாலாசாஹெப் தாக்கரே) கட்சியும், ராஜ் தாக்கரே தலைமையிலான நவ நிர்மான் சேனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசாங்கம் எங்கள் மீது இந்தியை திணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் கூறினர். இதற்கு பெரும் ஆதரவு திரண்டதை அடுத்து, மாநில அரசு தனது அறிவிப்பை திரும்பப் பெற்றது.
மாநில அரசின் இந்த முடிவை அடுத்து, அதற்கான வெற்றி விழா மும்பையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் ஒன்றாக இணைந்து மேடையில் தோன்றினர். அப்போது, அரங்கத்தில் இருந்த இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் உற்சாக மிகுதியில் கோஷங்களை எழுப்பினர்.
விழாவில் பேசிய உத்தவ் தாக்கரே, "நானும் ராஜ் தாக்கரேவும் இனி ஒன்றிணைந்து செயல்படுவோம். மும்பை மாநகராட்சி மற்றும் மகாராஷ்டிராவில் ஒன்றாக அதிகாரத்தைக் கைப்பற்றுவோம். நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற முடிவுடன் ஒன்றிணைந்துள்ளோம். அரசாங்கம் எங்கள் மீது இந்தியைத் திணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.” என தெரிவித்தார்.
ராஜ் தாக்கரே தனது உரையில், "மாநில அரசு விதித்த மும்மொழிக் கொள்கை, மும்பையை மகாராஷ்டிராவிலிருந்து பிரிக்கும் திட்டத்திற்கு முதல்படி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு நானும் உத்தவ் தாக்கரேவும் அரசியல் மேடையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். இதற்குக் காரணம், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்தான். எங்களை ஒன்றிணைக்க பால் தாக்கரே எவ்வளவோ முயன்றார். அவரால்கூட முடியாததை தேவேந்திர ஃபட்னவிஸ் செய்துவிட்டார்.
மராத்தி மக்கள் காட்டிய வலுவான ஒற்றுமை காரணமாக மகாராஷ்டிரா அரசு மும்மொழிக் கொள்கை குறித்த முடிவைத் திரும்பப் பெற்றது. பால் தாக்கரே ஆங்கிலப் பள்ளியில் படித்தார், ஆங்கில செய்தித்தாளில் பணியாற்றினார், ஆனால் மராத்தி மொழிக்கான மரியாதை விஷயத்தில் அவர் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளவில்லை.
தென்னிந்தியாவில் பல அரசியல்வாதிகளும், திரை நட்சத்திரங்களும் ஆங்கிலப் பள்ளிகளில் படித்தாலும் தங்கள் தாய் மொழியான தமிழ் மற்றும் தெலுங்கு மீது மிகுந்த பெருமையை கொண்டிருக்கிறார்கள்.” என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)

ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி : ரயில்ஒன் ஆப் அறிமுகம்
புதன் 2, ஜூலை 2025 11:40:00 AM (IST)
