» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெங்களூரில் ரூ.5 லட்சம் கேட்டு மாணவன் கடத்தி கொலை : 2 பேரை சுட்டுபிடித்த போலீஸ்!
சனி 2, ஆகஸ்ட் 2025 5:04:03 PM (IST)
பெங்களூரில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அரகெரே அருகே விஜயா வங்கி காலனியில் வசித்து வருபவர் அஜ்சுத். இவரது மகன் நிஷ்சித் (13). இந்த சிறுவன் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். அஜ்சுத் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம்(ஜூலை) 30-ந் தேதி மாலையில் டியூசனுக்கு சென்று நிஷ்சித் வீட்டுக்கு புறப்பட்டான். அப்போது மாணவனை மர்மநபர்கள் சிலர் கடத்தி சென்றனர்.
இரவு வரை மகன் வீட்டுக்கு வராததால், டியூசனுக்கு தொடர்பு கொண்டு மகன் குறித்து அஜ்சுத் விசாரித்தார். அப்போது ஏற்கனவே அவன் வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அஜ்சுத் தனது மகனை காணவில்லை என்று உளிமாவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடும் நடவடிக்கையில் இறங்கினார்கள்.
அத்துடன் மாணவனின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் இ-மெயில்(மின்னஞ்சல்) மூலம் அனுப்பி தகவல் தெரிவிக்கும்படி உளிமாவு போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். இதற்கிடையில், அஜ்சுத் வாட்ஸ்-அப்புக்கு ஒரு தகவல் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதில், உங்களது மகனை கடத்தி சென்று இருக்கிறோம், ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும், இல்லையேல் உங்களது மகனை கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி போலீசாருக்கு, அஜ்சுத் தெரிவித்தார்.
இதையடுத்து, எலெக்ட்ரானிக் சிட்டி துணை போலீஸ் கமிஷனர் நாராயண், கடத்தப்பட்ட மாணவனை மீட்க 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கக்கலிபுரா மெயின் ரோட்டில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் நிஷ்சித், உடல் பாதி எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தான். இதுபற்றி தகவல் அறிந்ததும் பன்னரகட்டா போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது போலீசார் தேடுவது பற்றி அறிந்ததும் மாணவனை கொன்றுவிட்டு, அவனது உடலை எரிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தல்காரர்கள் அனுப்பிய வாட்ஸ்-அப் தகவல் மூலமாக, அவர்கள் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டினார்கள். அப்போது கடத்தல்காரர்கள் பன்னரகட்டா அருகே உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருப்பது பற்றிய தகவல் உளிமாவு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரசாமிக்கு கிடைத்தது.
உடனே அவர், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது வனப்பகுதியில் பதுங்கி இருந்த கடத்தல்காரர்கள் 2 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். அந்த சந்தர்ப்பத்தில் தங்களிடம் இருந்த ஆயுதத்தால் போலீசாரை தாக்கிவிட்டு 2 பேரும் தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் குமாரசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் கடத்தல்காரர்களை நோக்கி தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டார்கள்.
இதில், ஒருவரது காலில் ஒரு குண்டு துளைத்தது. மற்றொரு நபரின் 2 கால்களிலும் குண்டுகள் துளைத்தது. இதனால் 2 பேரும் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார்கள். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தார்கள். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையில், கடத்தல்காரர்கள் வீவர்ஸ் காலனியை சேர்ந்த குருமூர்த்தி(25) மற்றும் தாவரகெரேயை சேர்ந்த கோபால்(27) என்று தெரிந்தது.
இவர்களில் குருமூர்த்தி, அஜ்சுத் வீட்டில் இதற்கு முன்பு கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது அஜ்சுத்திடம் ஏராளமான பணம் இருப்பது பற்றி தெரிந்து கொண்டார். மேலும் ரூ.5 லட்சம் கொடுக்கும்படி அஜ்சுத்திடம் கேட்டு இருந்தார். பின்னர் வேலையை விட்டு நின்றபின்பு நிஷ்சித்தை கடத்தி ரூ.5 லட்சம் பறிக்க முயன்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து குருமூர்த்தி, கோபால் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குருமூர்த்தி மீது ஏற்கனவே ஒரு போக்சோ வழக்குப்பதிவாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உளிமாவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: பாலம் இடிந்து சேதம் - வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலி!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:58:04 PM (IST)

நாங்கள் புதிய சந்தைகளைக் கைப்பற்றுவோம்: அமெரிக்காவுக்கு பியூஷ் கோயல் பதிலடி!
சனி 30, ஆகஸ்ட் 2025 4:19:31 PM (IST)

பெண்கள் தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வரை நிதியுதவி: பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு
சனி 30, ஆகஸ்ட் 2025 12:10:49 PM (IST)

இந்திய ஏற்றுமதியாளர்களின் பாதிப்பை சரிகட்ட பல்வேறு திட்டங்கள் : பியூஸ் கோயல் விளக்கம்
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 4:58:51 PM (IST)

விசாரணைக்கு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் : நீதிபதி பணி இடைநீக்கம்
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 4:55:00 PM (IST)

முதல்வர் ஸ்டாலின் எப்போது ஐயப்ப பக்தராக மாறினார்? - கேரள பாஜக தலைவர் கேள்வி
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 10:49:17 AM (IST)
