» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கற்பழிப்பில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே இருங்கள்: போலீசாரின் விழிப்புணர்வு போஸ்டரால் சர்ச்சை!!
ஞாயிறு 3, ஆகஸ்ட் 2025 10:39:02 AM (IST)

குஜராத்தில், கற்பழிப்பில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே இருக்குமாறு பெண்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக ஒட்டப்பட்ட காவல்துறை விழிப்புணர்வு போஸ்டர்களால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
குஜராத்தின் ஆமதாபாத் போலீசார் சார்பில் நகரின் பல இடங்களில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றில் பெண்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் சில வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அதாவது, ‘நள்ளிரவு பார்ட்டிகளுக்கு செல்லாதீர்கள், நீங்கள் கற்பழிக்கவோ, கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகவோ நேரிடும். உங்கள் நண்பர்களுடன் இருட்டான இடங்களுக்கு செல்ல வேண்டாம், கற்பழிக்கப்படவோ, கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகவோ நேரிடலாம்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.
நகரின் பல இடங்களிலும், சாலைகளின் மையப்பகுதிகளில் உள்ள தடுப்புச்சுவர்களிலும் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டர்கள் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தின. இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும் ஏற்பட்டது. எனவே அந்த போஸ்டர்கள் உடனடியாக கிழிக்கப்பட்டன.
எனினும் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மாநில அரசை கடுமையாக விமர்சித்தன. மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை இந்த போஸ்டர்கள் அம்பலப்படுத்தி இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘பெண்களின் அதிகாரம் குறித்து குஜராத் அரசு பேசி வருகிறது. ஆனால் கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 6,500-க்கும் அதிகமான கற்பழிப்பு சம்பவங்கள், 36-க்கு மேற்பட்ட கூட்டு பாலியல் பலாத்கார சம்பவங்கள் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 5-க்கும் மேற்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.
பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக முதல்-மந்திரியும், பா.ஜனதா தலைவர்களும் பேசினாலும், ஆமதாபாத் போன்ற பெரிய நகரத்தில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் குஜராத்தின் யதார்த்தத்தை வெளிப்படுத்தி உள்ளன என்றும் அதில குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. குஜராத் பெண்கள் இரவில் வீட்டிலேயே தங்கிருக்குமாறு முதல்-மந்திரி கூறுகிறாரா? இல்லையா? என்றும் அந்த கட்சி கேள்வி எழுப்பி இருந்தது.
இவ்வாறு இந்த போஸ்டர்கள் மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அது குறித்து ஆமதாபாத் போலீசார் விளக்கம் அளித்து உள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் நீதா தேசாய் கூறுகையில், ‘அந்த போஸ்டர்கள் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அது சாலை பாதுகாப்புக்கானதே தவிர, பெண்களின் பாதுகாப்புக்கானது அல்ல. எனினும் அதில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் போலீசாருக்கு தெரியாது’ என தெரிவித்தார்.
மேலும் அவர், ‘பள்ளி, கல்லூரிகளில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புவதாகவும், அதில் எங்கள் போலீசாரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். போக்குவரத்து விழிப்புணர்வு சார்ந்த வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் மட்டுமே எங்களிடம் காட்டினர். ஆனால் இந்த சர்ச்சைக்குரிய போஸ்டர்களை எங்களிடம் காட்டாமலேயே ஒட்டி இருக்கிறார்கள்’ என்றும் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: பாலம் இடிந்து சேதம் - வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலி!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:58:04 PM (IST)

நாங்கள் புதிய சந்தைகளைக் கைப்பற்றுவோம்: அமெரிக்காவுக்கு பியூஷ் கோயல் பதிலடி!
சனி 30, ஆகஸ்ட் 2025 4:19:31 PM (IST)

பெண்கள் தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வரை நிதியுதவி: பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு
சனி 30, ஆகஸ்ட் 2025 12:10:49 PM (IST)

இந்திய ஏற்றுமதியாளர்களின் பாதிப்பை சரிகட்ட பல்வேறு திட்டங்கள் : பியூஸ் கோயல் விளக்கம்
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 4:58:51 PM (IST)

விசாரணைக்கு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் : நீதிபதி பணி இடைநீக்கம்
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 4:55:00 PM (IST)

முதல்வர் ஸ்டாலின் எப்போது ஐயப்ப பக்தராக மாறினார்? - கேரள பாஜக தலைவர் கேள்வி
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 10:49:17 AM (IST)
