» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெண்கள் இட ஒதுக்கீட்டைச் சீர்குலைக்க திமுக முயற்சி - தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டு

வியாழன் 16, ஏப்ரல் 2026 4:12:41 PM (IST)



"தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுத் தவறான தகவல்களைப் பரப்பி, முதலைக் கண்ணீர் வடிக்கின்றன” என பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மக்களவையில் கடுமையாகச் சாடினார்.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கில், நாடாளுமன்றச் சிறப்பு அமர்வு இன்று தொடங்கியது. இதில் அரசியல் சாசனத் திருத்த மசோதா 2026 (131-வது திருத்தம்), தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இந்த மசோதாக்களைத் தாக்கல் செய்தனர். மசோதாவைத் தாக்கல் செய்து பேசிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், "தொகுதி மறுவரையறை மூலம் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சம் தேவையற்றது. அனைத்து மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையும் 50% அதிகரிக்கப்படும். இதன் மூலம் மக்களவையின் மொத்த இடங்கள் 815 ஆக உயரும். இதில் 272 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இதனால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு இருக்காது" என உறுதியளித்தார்.

மசோதாக்கள் மீதான விவாதத்தில் பங்கேற்ற கர்நாடக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா பேசியதாவது: "இந்த மசோதாக்கள் குறித்து திமுக ஏன் இவ்வளவு கூச்சலிடுகிறது? அவர்கள் வடிப்பது முதலைக் கண்ணீர் மட்டுமே. அரசியலமைப்புச் சட்டம் என்ன கட்டளையிடுகிறதோ, அதைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம்.

நானும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன்தான். கடந்த சில நாட்களாகத் தென்னிந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் மிகவும் அராஜகமான முறையில், திட்டமிட்டுத் தவறான தகவல்களைப் பரப்பி வருவதைக் காண்கிறோம். "40 ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு இந்தியப் பெண்கள் தங்களுக்குரிய உரிமையைப் பெறப்போகும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இது. இதனைத் தாமதப்படுத்தவும், சீர்குலைக்கவும் எதிர்க்கட்சிகள் 'தொகுதி மறுவரையறை' என்ற புதிய சாக்குப்போக்கை முன்வைக்கின்றன.

ஆந்திராவைப் பிரித்தபோது காங்கிரஸ் அரசு ஆங்கிலேயர்களை விட மோசமாகச் செயல்பட்டது. 2026-ல் தொகுதி மறுவரையறைப் பணியைப் பாஜக தலைமையிலான அரசே முன்னெடுக்கும் என்பதில் நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். எதிர்க்கட்சிகளின் வாதங்கள் அனைத்தும் அடிப்படை அற்றவை என்றும், பெண்கள் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதே அரசின் நோக்கம் என்றும் அவர் தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory