» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவின் புதிய முதல்வர் வி.டி. சதீசன்: காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வியாழன் 14, மே 2026 4:50:44 PM (IST)

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கேரள காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தாஸ்முன்ஷி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் பேசுகையில்: "திருவனந்தபுரத்தில் கடந்த மே 7-ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் கூட்டத்தில், சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தலைவருக்கு வழங்கப்பட்டது. இதன்படி, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கேரளாவின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு, வி.டி. சதீசனை சட்டமன்றக் குழுத் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார்."

கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் தனித்து 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கேரளாவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையவுள்ளது.

கேரளாவின் அடுத்த முதல்வர் பதவிக்கு வி.டி. சதீசன், ரமேஷ் சென்னிதாலா, சன்னி ஜோசப் மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோரிடையே பலத்த போட்டி நிலவியது. கடந்த ஒரு வாரமாக டெல்லியில் நிலவி வந்த இழுபறிக்குப் பிறகு, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி. சதீசனுக்கே முதலமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் வி.டி. சதீசன் கேரள ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அதைத் தொடர்ந்து அவரது தலைமையிலான புதிய அமைச்சரவை திருவனந்தபுரத்தில் பதவியேற்கும். கேரள அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை இந்தத் தேர்தல் முடிவும், வி.டி. சதீசனின் நியமனமும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory