» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்: முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் சதீசன் கடிதம்!

செவ்வாய் 28, ஜூலை 2026 4:54:10 PM (IST)

KeralaCmTNcmvijay.jpg

தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் கருங்கல் பாறைகள் மற்றும் ஜல்லிக்கற்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய்க்குச் கேரள முதல்வர் வி.டி. சதீசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசு கடந்த ஜூலை 9-ஆம் தேதியிட்ட அரசாணை (எண்: 306) மூலம், மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்லப்படும் கருங்கல் பாறைகள் மற்றும் ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.

இதன் காரணமாகத் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்குக் கொண்டு வரப்படும் கருங்கல் மற்றும் ஜல்லி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழக முதல்வர் விஜய்க்கு, கேரள முதல்வர் வி.டி. சதீசன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: "கேரளாவில் நடைபெறும் பல முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குத் தேவையான தரமான கற்களுக்குத் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களே நீண்டகாலமாக முக்கிய ஆதாரமாக விளங்கி வருகின்றன. தற்போது விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்துக் கட்டுப்பாடுகளால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு, உள்கட்டமைப்புப் பணிகள் தாமதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் கேரளாவுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் பிராந்திய இணைப்பிற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக, விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் மற்றும் வல்லார்படம் கன்டெய்னர் முனையத்திற்குத் தடையற்ற இணைப்பை வழங்க இச்சாலைகள் அவசியமாகும்.

தமிழக அரசின் கொள்கை நோக்கங்களை முழுமையாக மதிக்கும் அதேவேளையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டங்கள் பாதிக்கப்படாத வகையில் ஒரு சமச்சீரான அணுகுமுறையை உருவாக்க முடியும் என நம்புகிறேன். எனவே, கேரளாவில் நடைபெறும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான கட்டுமானப் பொருட்கள் தடையின்றிச் செல்லத் தகுந்த தளர்வுகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அக்கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory