» செய்திகள் - விளையாட்டு » உலகம்
காசாவின் அல்ஷிபாமருத்துவமனையில் சுரங்கப்பாதை : இஸ்ரேல் தகவல்
திங்கள் 20, நவம்பர் 2023 12:02:16 PM (IST)
காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்ஷிபா மருத்துவமனையில் சுரங்கப்பாதை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேவேளை, காசாமுனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், காசாமுனைக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பதுங்கு குழிகளை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். இதனிடையே, போர் இன்று 45 வது நாளாக நீடித்து வருகிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் தரைவழி, வான்வழி தாக்குதலில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 191 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 391ஐ கடந்துள்ளது.
இதனிடையே, காசாவில் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பதுங்கி உள்ளதாக குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இஸ்ரேலின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். இதன் காரணமாக அல்-ஷிபா மருத்துவமனையில் தங்கி இருந்த பெரும்பாலானோர் வெளியேறிவிட்டனர்.
இந்நிலையில், காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்ஷிபா மருத்துவமனையில் சுரங்கப்பாதை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. அல்ஷிபா மருத்துவமனை உள்ளே 10 மீட்டர் ஆழத்தில் 55 மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.