» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து விபத்து: 181 பேர் உயிரிழப்பு!
வியாழன் 24, அக்டோபர் 2024 12:31:50 PM (IST)
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் ஜிகாவா மாகாணத்தில் கடந்த 15ம் தேதி இரவு பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது.
இதனால், அந்த பெட்ரோலை சேகரிக்க அப்பகுதியிலுள்ள மக்கள் சாலையில் குவிந்தனர். மக்கள் பெட்ரோலை சேகரித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு லாரி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி பலியாகினர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பலர் உயிரிழந்து விட்டநிலையில், தற்போது இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.