» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மோடி - ட்ரம்ப் சந்திப்பு : பயங்கரவாதி ரானாவை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்பந்தம்!

வெள்ளி 14, பிப்ரவரி 2025 12:29:36 PM (IST)



அமெரிக்காவில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் -  பிரதமர் மோடி சந்திப்பின்போது பயங்கரவாதி ரானாவை இந்தியாவுக்கு  நாடு கடத்துவது உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.14) அதிகாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ரானாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது, F-35 போர் விமானங்களை வாங்குவது, எண்ணெய் இறக்குமதி, வர்த்தக ஒப்பந்தம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து இருதரப்பிலும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தாயகம் புறப்பட்டார். 

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையின் சத்ரபதி ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் பயங்கர தாக்குதல் நடத்தினர். சுமார் 60 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் வெளிநாட்டினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய கனடா வாழ் பாகிஸ்தானியரான தஹாவூர் ராணா. மும்பை தாக்குதலை திட்டமிடுவதற்காக மும்பையின் தாஜ் மஹால் ஓட்டலில் சில நாட்கள் தங்கியிருந்து நோட்டமிட்டதாக ராணா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ரானா அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, ரானாவை நாடு கடத்தக் கோரி இந்தியா சார்பில் அமெரிக்காவின் கீழ் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் ரானாவை நாடுகடத்த பச்சைக்கொடி காட்டியது. இது குறித்து மோடியுடனான சந்திப்பின்போது ட்ரம்ப், "2008 மும்பை தாக்குதலுக்கு சதி செய்த தஹாவூர் ரானாவை நாடு கடத்த நான் உத்தரவிட்டுள்ளேன். இந்தியாவில் ரானா நீதியின் முன் நிறுத்தப்படுவார்.” என்று கூறியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "2008-ல் இந்தியாவில் படுகொலைகளை நிகழ்த்திய குற்றவாளியை நாடு கடத்த உத்தரவிட்ட அதிபருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இந்திய நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும்.” என்று கூறியுள்ளார்.

F-35 போர் விமான ஒப்பந்தம்: இந்தியாவுக்கான ராணுவ தளவாட ஒப்பந்தங்கள் குறித்து பேசிய அதிபர் ட்ரம்ப், "இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்கள் விற்பனையை அமெரிக்கா அதிகரிக்கவுள்ளது. இந்தியாவுக்கு F35 ஸ்டீல்த் ஃபைட்டர் விமானங்களை வழங்கவுள்ளோம் என்று ட்ரம்ப் கூறினார்.அதேபோல், அமெரிக்க - இந்திய முக்கிய பாதுகாப்பு கூட்டாண்மைக்கான புதிய 10 ஆண்டு ஒப்பந்தம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கையெழுத்திட முடிவு எட்டப்பட்டது.

வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்க அதிபரான நாள் தொட்டு இறக்குமதி வரி உள்ளிட்ட பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் உலக நாடுகளை ட்ரம்ப் அதிரவைத்துள்ளார். இந்நிலையில், மோடி - ட்ரம்ப் சந்திப்பின்போது வரி விதிப்புகள் தொடர்பான சமரச பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதென்ன ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி, "இந்தியா - அமெரிக்கா என இருதரப்புக்கும் பலன் தரும் வகையில் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் எண்ணெய், எரிவாயு தொடர்பான ஒப்பந்தங்கள் பற்றி ஆலோசிக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இரு தலைவர்களும் 2030ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்துவதற்கான புதிய இலக்கை "மிஷன் 500" என்ற பெயரில் நிர்ணயித்தனர்.

MAGA + MIGA சுவாரஸ்யப் பேச்சு: பிரதமர் மோடி பேசுகையில், "இங்கே அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவை மீண்டும் பெரிதாக்குவோம் (MAGA) எனக் கூறியுள்ளார். அதேபோல் நாங்கள் விக்‌ஷித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) என்ற நோக்கில் செயல்படுகிறோம். ட்ரம்ப் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் அதற்கு (MIGA) ‘மேக் இந்தியா கிரேட் அகெய்ன்’ என்று அர்த்தம். அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்பட்டால் வளர்ச்சிக்கான மெகா கூட்டணியாக அது அமையும் என்றார். அவருடைய இந்த சுவாரஸ்யப் பேச்சு வரவேற்பைப் பெற்றது.

உதவிக்கு வரத் தயார்: மோடி - ட்ரம்ப் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது ட்ரம்ப், சீனா - இந்தியா எல்லைப் பிரச்சினை குறித்துப் பேசினார். அப்போது அவர், "நான் இந்திய - சீன எல்லையில் என்ன நடக்கிறது என்று கவனிக்கிறேன். அங்கே நிகழும் சண்டைகள் ஆபத்தானவை. அதில் நான் ஏதும் உதவி செய்ய வேண்டும் என்றால் உதவத் தயாராக இருக்கிறேன். அங்கு நிகழும் சண்டை நிறுத்தப்பட வேண்டும்.” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory