» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் பதற்றம்: வான்வழித் தாக்குதலில் 130-க்கும் மேற்பட்டோர் பலி!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 4:50:48 PM (IST)

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் மோதல், தற்போது நேரடிப் போர் சூழலாக மாறியுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி நடத்திய வான்வழி மற்றும் நிலப்பரப்புத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரி 6-ம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளே காரணம் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானின் அதிரடி பதில் தாக்குதல்
பாகிஸ்தானின் நடவடிக்கைக்குப் பதிலடியாக, நேற்று இரவு டுராண்ட் கோடு (Durand Line) எல்லைப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது தாலிபான் அரசு கடுமையான தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் 55 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த நடவடிக்கையில், பாகிஸ்தானின் 2 ராணுவத் தளங்கள் மற்றும் 19 சாவடிகள் அழிக்கப்பட்டதாகவும், பல வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் தாலிபான் தரப்பு தெரிவித்துள்ளது. (ஆனால், முகாம்கள் கைப்பற்றப்பட்டதை பாகிஸ்தான் மறுத்துள்ளது). தாலிபான்களின் தாக்குதலைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 1:50 மணியளவில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் முக்கிய நகரமான காந்தஹார் மீது பாகிஸ்தான் ராணுவம் சரமாரியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இத்தாக்குதலில் 133 தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், தாலிபான்களின் 27 ராணுவ நிலைகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தாலிபான் அரசு விடுத்துள்ள அறிக்கையில், "கொல்லப்பட்டவர்கள் தாலிபான்கள் அல்ல; அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள்" என்று குற்றம் சாட்டியுள்ளது.
"நேரடிப் போருக்குத் தயார்" - பாகிஸ்தான் எச்சரிக்கை
இந்த விவகாரம் குறித்துப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "ஆப்கானிஸ்தானின் அத்துமீறலே எங்களை இந்தப் பதில் தாக்குதலுக்குத் தூண்டியது. எத்தகைய தாக்குதலையும் முறியடிக்கும் திறன் பாகிஸ்தான் ராணுவத்திற்கு உண்டு" என்றார். தாலிபான் ஆட்சியின் செயல்பாடுகளால் பாகிஸ்தான் பொறுமை இழந்துவிட்டதாகவும், இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை, நேரடிப் போர் நடத்தப்படும் என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உக்ரைன் தானியங்களைத் திருடி இஸ்ரேலுக்கு விற்கும் ரஷ்யா: ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:57:27 PM (IST)

இந்தோனேசியாவில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 12:29:01 PM (IST)

ஈரான் தொலைபேசியில் அழைப்பு விடுக்கட்டும் : பேச்சுவார்த்தையை தொடரலாம் - ட்ரம்ப்
திங்கள் 27, ஏப்ரல் 2026 11:13:06 AM (IST)

மீண்டும் ஒரு கொலை முயற்சி: வாஷிங்டனில் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு; மர்ம நபர் கைது!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:29:32 AM (IST)

அமெரிக்காவில் ‘எச்-1பி’ விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை: இந்திய ஐ.டி. ஊழியர்கள் அதிர்ச்சி!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:36:25 AM (IST)

போருக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் ஈரான்: மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கம்!
சனி 25, ஏப்ரல் 2026 5:45:45 PM (IST)


