» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள்: நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 4:02:13 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், இன்று மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களான மூன்று சக்கர சைக்கிள், பெட்ரோல் ஸ்கூட்டர், மடக்கு சக்கர நாற்காலி மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி, தையல் இயந்திரம், பிரெய்லி வாட்ச், கருப்பு கண்ணாடி, ஊன்று கோல், ஸ்மார்ட் போன், மற்றும் பராமரிப்பு உதவித்தொகை, ஆகியவற்றைக்கான மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
மேலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் PMEGP, UYEGP, தொழில் துவங்குவதற்கான மனுக்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வாயிலாக குறைந்த வட்டியில் தொழில் புரிவதற்கான வங்கி கடன், ஆவின் பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் ஆகியவற்றிக்கான மனுக்கள் மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான மனுக்கள் என 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
இக்கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது: முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு பெறப்பட்டவுடன் அவர்களுடைய மனுக்கள் பரிசீலித்து உடனடியாக ஒரு பயனாளிக்கு ரூ.1 இலட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியினையும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.7,000/- மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.15,000/- மதிப்பில் தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசிகளும் ஆக மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.2.10 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இன்று பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா , சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் ஜெயா , மாற்றுத்திறனாளி நல அலுவலர் சிவசங்கரன் , உட்பட அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.