» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மீனவர்கள், விவசாயிகளுக்கு மத்திய அரசு எதையும் செய்யவில்லை: நெல்லையில் ராகுல் பேச்சு

வெள்ளி 12, ஏப்ரல் 2024 5:10:15 PM (IST)"ஒருபுறம் பெரியார் உள்ளிட்டோர் போதித்த சமூகநீதி; மறுபுறம் மோடியின் வெறுப்புணர்வு. இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடைபெறும் தேர்தல் இது" என்று நெல்லை பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். 

'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை நெல்லை வந்தடைந்தார். நெல்லை வந்த ராகுல் காந்தியை தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.

ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை தனியார் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்கிய ராகுல்காந்தி, அங்கிருந்து கார் மூலம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான பாளையங்கோட்டை நெல்லை - திருச்செந்தூர் சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்துக்கு சென்றார்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் ராகுல்காந்தி, இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ராபர்ட் புரூஸ் (நெல்லை), கனிமொழி (தூத்துக்குடி), ராணிஸ்ரீகுமார் (தென்காசி), சு.வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), நவாஸ்கனி (ராமநாதபுரம்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), விஜய் வசந்த் (கன்னியாகுமரி) ஆகியோரை ஆதரித்து பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். தமிழகத்திற்கு வருவதை மிகவும் விரும்புகிறேன். எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்து கொள்ள விரும்புகிறேனோ அப்போதெல்லாம் தமிழகத்தை பார்க்கிறேன். பெரியார், காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் தமிழகத்தின் ஆளுமைகள். தமிழகத்தை விரும்புவதால்தான் எனது யாத்திரையை நான் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினேன். தமிழக கலாசாரம், பண்பாடு என்னை கவர்ந்துள்ளது. என் மீது தமிழக மக்கள் அன்பை பொழிந்துள்ளனர்.

ஒருபுறம் பெரியார் உள்ளிட்டோர் போதித்த சமூகநீதி; மறுபுறம் மோடியின் வெறுப்புணர்வு. இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடைபெறும் தேர்தல் இது. எதிரணியில் இருப்பவர்கள் ஒரே கலாசாரம், ஒரே மொழி என்ற சித்தாந்தத்தில் உள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து கலாச்சாரங்களும் காக்கப்பட வேண்டும் என்பதே காங்கிரசின் நிலைப்பாடு. தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல் நடைபெறுகிறது. தமிழ் மொழி மீதான தாக்குதலை தமிழர்கள் மீதான தாக்குதல் என்றே பார்க்கிறேன். அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் வேண்டும். 

மீனவர்கள், விவசாயிகளுக்கு மத்திய அரசு எதையும் செய்யவில்லை. தமிழகத்திற்கு செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு மோடி நிதி தர மறுத்துவிட்டார். வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி தர திட்டமிட்டுள்ளோம். தகுதி பெற்ற ஒவ்வொரு இளைஞருக்கும் ரூ. 1 லட்சம் நிதி உதவியுடன் பறிற்சி தர திட்டமிட்டுள்ளோம். காலியாக உள்ள 30 லட்சம் அரசு பணியிடங்களை உடனே நிரப்புவோம். வேலையில்லாத டிப்ளமோ, பொறியியல், பட்டதாரிகளுக்காக வேலைவாய்ப்பு பயிற்சி சட்டம் நிறைவேற்றுவோம்.

தேர்தல் ஆணையர்களை பிரதமர் தான் தேர்வு செய்கிறார். காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நீட் தேர்வு பெரும் பிரச்னையாக நீடித்து வருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு வேண்டுமா என்பதை மாநில அரசே முடிவு எடுத்துக் கொள்ளலாம். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்றுவோம். பிரதமர் மோடி, மிகப்பெரிய பணக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் கடன் வழங்கியுள்ளார். 

நாங்கள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய விரும்புகிறோம். வறுமையில் உள்ள குடும்ப பெண் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். இந்தியாவில் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பான திட்டத்தை இந்தியா கூட்டணி வைத்துள்ளது. அரசு வேலைகளில் 50 சதவீத பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். நாட்டின் மீனவர்களை பிரதமர் மோடி முழுமையாக மறந்துவிட்டார். 

விவசாயிகள் எவ்வளவு முக்கியமோ மீனவர்களும் நாட்டுக்கு மிகவும் முக்கியம். மீனவர்களின் படகுகளுக்கு டீசல், காப்பீடு, கடன் அட்டை உள்ளிட்டவை வழங்கப்படும். பண்பாடு, கலாசாம், மொழிக்காக நாங்கள் தொடுத்துள்ள யுத்தம் தான் இந்த தேர்தல். தமிழ்நாட்டு மக்களோடு காங்கிரஸ் என்றும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory