» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

புதன் 1, மே 2024 8:45:47 AM (IST)

தென்காசி, கடையநல்லூர் பகுதியில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் ெபாதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வீடுகளில் முடங்கினார்கள். 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்ததால் பொதுமக்கள் நீர்நிலைகளை நோக்கி படையெடுத்தனர். மழை எப்போது பெய்யும் என்று காத்திருந்தனர்.

இந்த நிலையில் தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இதையடுத்து தென்காசி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது. கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டன. திடீரென்று இடி மின்னலுடன் கோடை மழை பெய்தது. சுமார் ¼ மணி நேரம் இந்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. அங்குள்ள அல்லிமூப்பன் தெருவில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.

இதேபோல் தென்காசி, குற்றாலம், மேலகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 3.45 மணிக்கு இடியுடன் பலத்த மழை பெய்தது. இதில் பொதுமக்கள் குடை பிடித்தபடி நடந்து சென்றனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory