» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. தலைவர்களுக்கு சம்மன்

செவ்வாய் 21, மே 2024 10:04:58 AM (IST)

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி சிக்கிய வழக்கில் பா.ஜ.க. மாநில அமைப்பு செயலாளருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. 

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடந்த மாதம் 6ம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயிலில் பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, சென்னை எழுப்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம் சென்றபோது அதில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், தமிழ்நாடு பா.ஜ.க. துணைத்தலைவரும், நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஓட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் என்பது தெரியவந்தது. தேர்தல் செலவுகளுக்காக நயினார் நாகேந்திரன் உத்தரவின்பெயரிலேயே பணத்தை நெல்லைக்கு கொண்டு சென்றதாக கைது செய்யப்பட்டவர்கள் போலீசில் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி ஏற்கனவே சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்நிலையில், 4 கோடி ரூபாய் சிக்கிய வழக்கு தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி பா.ஜ.க. மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேவேளை, விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் தரும்படி கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory