» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் மார்க்சிஸ்ட் அலுவலகம்சூறை: 13 பேர் கைது!

சனி 15, ஜூன் 2024 12:48:15 PM (IST)

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் சிபிஐஎம் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருநெல்வேலி பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி (23) பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

6 ஆண்டுகளாக காதலித்து வந்த ஜோடிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் உள்ள லெனின் சிலை முன்பு போலீஸ் பாதுகாப்புடன் சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமது மகளை காணவில்லை என்று பெண் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் இருப்பதாக பெண் வீட்டாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெண்ணின் உறவினர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

அவர்கள் அப்பெண்ணை அழைத்தபோது, அவர் வர மறுத்ததால் கட்சி நிர்வாகிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டு கட்சி அலுவலக கண்ணாடிகளையும், நாற்காலிகளையும் உடைத்ததுடன், கட்சி நிர்வாகிகளையும் தாக்கியுள்ளனர். பாதுகாப்புக்கு இருந்த போலீசார் தடுத்தும் அவர்களின் வன்முறை வெறியாட்டம் ஓயவில்லை.

இதில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அருள்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பசேரா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

இதற்கிடையே, சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "காவல்துறை அனுமதியோடு திருமணத்தை பதிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொண்ட நிலையில் பந்தல் ராஜா மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட 25 பேர் கொண்ட கும்பல் திருநெல்வேலி, வினோபா நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்குள் நுழைந்து காவல்துறையினர் முன்பாகவே மேஜை, நாற்காலி, கண்ணாடி, கதவு, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதனை தடுக்கச் சென்ற அருள்ராஜ் மற்றும் முருகன் இருவரையும் தாக்கியுள்ளனர். காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கும்பலில் சிலரை பிடித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை தாக்கிய கும்பலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து சாதி ஆணவப் படுகொலை நடந்து வருவது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதன் தொடர்ச்சியாகவே காதல் தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கி ஊழியர்களை காயப்படுத்தியுள்ளார்கள். இச்சம்பவத்தை தமிழக காவல்துறை அலட்சியப்படுத்தாமல் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் - சம்பந்தப்பட்ட காதல் தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அழுத்தமாக வற்புறுத்துகிறது." எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நெல்லை மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடிய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் தந்தை முருகவேல், தாய் சரஸ்வதி, குறிப்பிட்ட சாதி சங்கத்தைச் சேர்ந்த மாநில இளைஞரணி அமைப்புச் செயலாளர் பந்தல்ராஜா மற்றும் 5 பெண்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

உங்களுக்குJun 17, 2024 - 02:18:20 PM | Posted IP 162.1*****

ஏண்டா இந்த மாமா வேலை..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory