» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தேயிலை தோட்டத்தில் பணிக்காலம் முடிந்தது; விடைபெற்ற மாஞ்சோலை தொழிலாளர்கள்

ஞாயிறு 16, ஜூன் 2024 11:31:36 AM (IST)



தேயிலை தோட்டத்தில் பணிக்காலம் முடிந்ததால், மாஞ்சோலை தொழிலாளர்கள் கண்ணீர்மல்க விடைபெற்றனர். 

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து போன்ற இடங்களில் தனியார் நிறுவனம் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலங்களை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்று தேயிலை தோட்டங்களை நடத்தி வருகிறது. அங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர்.

தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடையும் நிலையில், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வை அறிவித்தது. அதன்படி தனியார் நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிய விரும்புகிறவர்களுக்கு வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்யவும், தொடர்ந்து பணியாற்ற விருப்பமில்லாதவர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்குவதாகவும் அறிவித்தது.

விருப்ப ஓய்வுபெறும் தொழிலாளர்கள் நேற்று வரை விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களுக்கு 25 சதவீத நிவாரணத்தொகையும், வருகிற ஆகஸ்டு மாதம் 7-ந்தேதிக்குள் குடியிருப்புகளை காலி செய்து உடைமைகளை திருப்பி ஒப்படைத்தவுடன் மீதி 75 சதவீத நிவாரணத்தொகையும் வழங்குவதாக அறிவித்தது.

இதையடுத்து கடந்த சில நாட்களாக ஏராளமான தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தனர். நேற்றும் பெரும்பாலான தொழிலாளர்கள், தனியார் நிறுவன நிர்வாக அலுவலகத்தில் விருப்ப ஓய்வுக்கான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.

பின்னர் அவர்கள் தாங்கள் பணியாற்றிய தேயிலை தோட்டங்களுக்கு குழுவாக சென்று புகைப்படம் எடுத்து கொண்டனர். பல தலைமுறைகளாக ஒன்றாக வாழ்ந்த இடத்தை விட்டு பிரிந்து செல்வதை எண்ணி தொழிலாளர்கள் கண்கலங்கினர். எவ்வித பேதமின்றி ஒன்றாக வாழ்ந்த காலம் மீண்டும் தங்களுக்கு கிடைக்குமா? என்று சில பெண்கள் கண்ணீர் விட்டனர்.

தேயிலை தோட்டங்களை சுற்றி வந்த சிலர், ‘பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித்திரிந்த பறவைகளே’ என்றும் உருக்கமாக பாடி பிரியாவிடை பெற்றனர். பணிக்காலம் முடிந்ததால் தொழிலாளர்கள் தங்களது குடியிருப்புகளை காலி செய்து வெளியேற ஆயத்தமானார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory