» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
3 பேரை வெட்டிக்கொன்ற வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
வெள்ளி 27, செப்டம்பர் 2024 8:40:22 AM (IST)
சங்கரன்கோவில் அருகே 3 பேரை வெட்டிக்கொன்ற வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் உடப்பன்குளத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஒரு சமூகத்தினர், மாற்று சமூகத்தினர் வசிக்கும் இடத்தில் பட்டாசு வெடித்தனர். அப்போது 2 இருசமூகத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இது நாளடைவில் முன்விரோதமாக மாறியது.
இதன் காரணமாக கடந்த 28-5-2014 அன்று ஒருவரை மற்றொரு சமூகத்தினர் அரிவாளால் வெட்டி சாதி பெயரை சொல்லி திட்டியதாக திருவேங்கடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதற்கு பழி வாங்க வேண்டும் என்பதற்காக உடப்பன்குளத்தை சேர்ந்த பொன்னுமணி, குட்டிராஜ், குருசாமி, செல்லையா மகன் கண்ணன், உலக்கன், காளிராஜ் என்ற தங்கராஜ், வேலுச்சாமி மகன் கண்ணன் உள்ளிட்டவர்கள் சேர்ந்து மாற்று சமூகத்தை சேர்ந்தவர்களை கொலை செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி 1-6-2014 அன்று உடப்பன்குளம் கீழ தெருவை சேர்ந்த காளிராஜ் (55), கோவை துடியலூரை சேர்ந்த வேணுகோபால் (42), முருகன் (42) ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
உடப்பன்குளம் சித்த மருத்துவமனை அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளை வழிமறித்து பொன்னுமணி, குட்டிராஜ், குருசாமி, உலக்கன் உள்ளிட்டவர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் 3 பேரையும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இதில் கோவையை சேர்ந்த வேணுகோபால், முருகன் ஆகியோர் சங்கரன்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உடப்பன்குளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் காளிராஜூடன் மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவிலுக்கு புறப்பட்டு சென்றபோது, இந்த கொடூர சம்பவம் நடந்தது.
இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் விசாரணை நடத்தி பொன்னுமணி (34), குட்டிராஜ் (44), குருசாமி (49), செல்லையா மகன் கண்ணன் (60), உலக்கன் (55), காளிராஜ் என்ற தங்கராஜ் (36), வேலுச்சாமி மகன் கண்ணன் (38), முருகன் என்ற பாலமுருகன் (56), முத்துகிருஷ்ணன் (55), வெளியப்பன் மகன் கண்ணன் (40), சுரேஷ் (46), ஜெயராம், முருகன், செல்வராஜ், பொன்ராஜ், வைரமுத்து, சரவணன், சுப்புராஜ், மாரிராஜ், ரமேஷ், கருப்பசாமி, பாலசுப்பிரமணியன், ஜெயா, கணேசமூர்த்தி, மற்றொரு கருப்பசாமி ஆகிய 25 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடந்து வந்த காலகட்டத்தில் ஜெயராம், பொன்ராஜ், சரவணன் ஆகியோர் உயிர்இழந்தனர். கடந்த 24-ந் தேதி நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
பொன்னுமணி, குட்டிராஜ், குருசாமி, செல்லையா மகன் கண்ணன், உலக்கன், காளிராஜ் என்ற தங்கராஜ், வேலுச்சாமி மகன் கண்ணன், முருகன் என்ற பாலமுருகன், முத்துகிருஷ்ணன், வெளியப்பன் மகன் கண்ணன், சுரேஷ் ஆகிய 11 பேரையும் நீதிபதி குற்றவாளிகளாக அறிவித்தார். மற்றவர்களை விடுதலை செய்தார்.
குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் 26-ந் தேதி அதாவது நேற்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று காலை முதலே கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. 11 பேருக்கு தண்டனை விவரம் என்ன இருக்கும் என்று காலை முதலே பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
11 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் இரவு 8.30 மணியளவில் பரபரப்பு தீர்ப்பு கூறினார். அதில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பொன்னுமணி, குருசாமி, காளிராஜ் என்ற தங்கராஜ், முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
அதேபோல் குட்டிராஜ், ெசல்லையா மகன் கண்ணன், உலக்கன், வேலுச்சாமி மகன் கண்ணன், முருகன் என்ற பாலமுருகன் ஆகிய 5 பேருக்கு 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதாவது, 3 பேரை கொன்றதற்கு 3 ஆயுள், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு ஆயுள், கூட்டு சதியில் ஈடுபட்டதற்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் வெளியப்பன் மகன் கண்ணனுக்கும், சுரேசுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதாவது வன்கொடுமை தடுப்பு சட்டம், கூட்டு சதியில் ஈடுபட்டதற்கு தலா 1 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கும் தலா ரூ.1¼ லட்சம் அபராதமும், 5 ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்கு தலா ரூ.1.15 லட்சமும், இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.1.10 லட்சமும் அபராதம் விதித்து நீதிபதி சுேரஷ்குமார் தீர்ப்பளித்தார்.
மேலும், தீர்ப்பு வழங்கியதும் அவர் தனது பேனாவை உடைத்தார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட உடன் பொன்னுமணி கதறி அழுதார். அதுபோல் கோர்ட்டு வந்த தண்டனை பெற்றவர்களின் உறவினர்களும் கதறி துடித்தனர். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் கந்தசாமி ஆஜரானார். இந்த தீர்ப்பு காரணமாக நெல்லை கோர்ட்டு வளாகம் நேற்று காலை முதல் இரவு வரை பரபரப்புடன் காணப்பட்டது.