» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காமராஜரை இழிவாக பேசிய திமுக நிர்வாகி : தெக்ஷண மாற நாடார் சங்கம் கடும் கண்டனம்!
வெள்ளி 25, அக்டோபர் 2024 5:30:18 PM (IST)
பெருந்தலைவர் காமராஜரை பற்றி இழிவாக பேசிய திமுக மாணவரணி துணைத் தலைவர் ராஜூவ்காந்தி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் காளிதாசன் வெளியிட்ட அறிக்கையில், "சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களை பற்றி திமுக மாணவரணி துணைத்தலைவர் ராஜீவ்காந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
பெருந்தவைர் காமராஜர் தனது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியிலும் கூட பள்ளிக்கூடங்களை நடத்துவதும், இலவச மதிய உணவு வழங்குவதும் எப்படி சாத்தியம் என அரசு அதிகாரிகள் கதிகலங்கி நின்றபோது நிதியை தானமாக பெற நாட்டின் உற்பத்தியை பெருக்கி பள்ளிகளுக்கென நிதி திரட்டியவர் பெருந்தலைவர் காமராஜர். தமிழகத்தில் அணைகள் பல கட்டி விவசாயத்தை ஊக்குவித்தவர்.
தொழிற்சாலைகள் ஏராளமாக துவங்கி தமிழ்நாட்டில் உற்பத்தியை பெருக்கியவர், இன்றைய தமிழ்நாட்டின் அனைத்து விதமான வளர்ச்சிக்கும் வேறாக திகழ்பவர் பெருந்தலைவர். பிரதமர் பதவியே தேடி வந்தபோது தனக்கு வேண்டாம் என்று உதறி தள்ளியவர். இன்று வரை தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று சூளுரைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் பொற்கால ஆட்சியை நடத்தியவர் பெருந்தலைவர் காமராஜர். தனது வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காக அர்ப்பணித்தவர், அத்தகைய உத்தமரை இழிவாக பேசியது மிகவும் கண்டனத்திற்குரியது.
தமிழக காவல்துறை ராஜீவ்காந்தி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், திமுக உயர்மட்ட ஒழுங்கு நடவடிக்கை குழு ராஜீவ்காந்தி மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கவேண்டுமென்று அனைத்து நாடார் சமுதாய மக்கள் சார்பாக திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.