» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு: அமைச்சர் புறக்கணிப்பு!!
ஞாயிறு 27, அக்டோபர் 2024 9:20:44 AM (IST)
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, 33,821 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி. அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் வரவேற்று, அறிக்கை வாசித்தார். மொத்தம் 33,821 பேருக்கு பட்டங்கள் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், 571 பேருக்கு நேரடியாக பட்டங்களை வழங்கினார்.
இதில் இளநிலை, முதுநிலை, எம்.பில். பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்ற 14 மாணவர்கள், 97 மாணவிகள் என 111 பேருக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டம் வழங்கினார். 83 மாணவர்கள், 377 மாணவிகள் என 460 பேருக்கு முனைவர் பட்டங்களை வழங்கினார்.
விழாவில் திருவனந்தபுரம் தேசிய புவி அறிவியல் ஆய்வு மைய இயக்குனர் என்.வி.சலபதி ராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பட்டமளிப்பு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கல்வி தான் ஒரு நாட்டை பின் தங்கிய நிலையில் இருந்து முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும். ஏறக்குறைய 1,500 ஆண்டுகளாக, கி.மு. 3-ம் நூற்றாண்டில் தட்சசீலம் பல்கலைக்கழகத்தின் நாட்களில் தொடங்கி, கி.பி. 12-ம் நூற்றாண்டில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வீழ்ச்சி வரை, இந்தியா உயர்கல்வித் துறையில் உலகத் தலைமையாக இருந்தது.
சர்வதேச தரத்துக்கு இந்திய கல்வியை கொண்டு செல்வதில் 2020-ம் ஆண்டு தேசிய கல்விக்கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய கல்வி நிலை சிறந்து விளங்க தேசிய கல்விக்கொள்கை அவசியம்.
வளர்ந்து வரும் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு, பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், குடிநீர், பாசனம் வசதி, சுகாதாரம் போன்றவை மிகப்பெரிய சவாலாகும். அதை எதிர்கொள்ளும் வகையில் சாதாரண மனிதனுக்கும் பயன்படும் வகையில் ஆய்வுகள் இருக்க வேண்டும்.
சுதந்திரம் பெற்று 100-வது ஆண்டான, 2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் லட்சியம். அப்போது உலகிலேயே நம்பர்ஒன் நாடாக திகழ்வதற்கு இங்கு பட்டம் பெற்றுள்ள இளைஞர்கள் தங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் பதிவாளர் சாக்ரடீஸ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாலசுப்பிரமணியன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டார்கள். விழாவில் குமரி மாவட்டம் மந்தாரம்புதூரை சேர்ந்த பார்வை திறன் குறைந்த புரோஸ்கான் (வயது 38) என்பவரும் முனைவர் பட்டம் பெற்றார். இதுதவிர முன்னாள் போலீஸ் அதிகாரி மாசானமும் முனைவர் பட்டம் பெற்றார்.
விழாவை முடித்துவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி மாலையில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு காரில் சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.
ஆளுநர் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஏற்பட்ட சர்ச்சை மற்றும் ஏ.பி.வி.பி.யை சேர்ந்தவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல்கலைக்கழக வளாகம் மற்றும் ஆளுநர் வந்து சென்ற பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விழாவை புறக்கணித்த அமைச்சர்
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே கருத்து மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற பல்வேறு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணித்து வந்தார். இதேபோல் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் அமைச்சர் கோவி செழியன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.