» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பைக் விபத்தில் வங்கி பெண் ஊழியர் சாவு: மாடுகள் குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்
திங்கள் 18, நவம்பர் 2024 8:33:51 AM (IST)
வீரவநல்லூர் அருகே கணவருடன் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த வங்கி பெண் ஊழியர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
நெல்லை பேட்டையைச் சேர்ந்தவர் சந்தானம் (36). இவர், சேரன்மாதேவி கோவிந்தபேரியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நிவேதிதா பிரியதர்ஷினி (30). இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நிவேதிதா பிரியதர்ஷினி, கல்லிடைக்குறிச்சியில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் உதவியாளராக பணி செய்து வந்தார். கடந்த 12-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சந்தானம் தனது மனைவி நிவேதிதாவுடன் கல்லிடைக்குறிச்சிக்கு வந்து கொண்டிருந்தார்.
வெள்ளங்குளி அருகே வந்தபோது மாடுகள் திடீரென ரோட்டின் குறுக்கே பாய்ந்ததால் சந்தானம் மோட்டார் சைக்கிளில் பிரேக் பிடித்துள்ளார். அப்போது பின்புறம் அமர்ந்திருந்த நிவேதிதா பிரியதர்ஷினி, தலை குப்புற கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த நிவேதிதா பிரியதர்ஷினிக்கு அம்பை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நிவேதிதா பிரியதர்ஷினி, நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நிவேதிதா பிரியதர்ஷினி உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடல் உறுப்புகள் சேகரிக்கப்பட்டு, வேறு நபர்களுக்கு பொருத்துவதற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதே நேரத்தில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு வந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மாலையில் நிவேதிதா பிரியதர்ஷினி உடலுக்கு டீன் ரேவதி பாலன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.