» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருமண பேனர் வைப்பதில் தகராறு: வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை!
திங்கள் 18, நவம்பர் 2024 8:37:32 AM (IST)
குற்றாலம் அருகே திருமண பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற நண்பருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் பட்டுராஜ் (29). கேபிள் டி.வி. ஆபரேட்டரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் பொதிகாசலம் மகன் கணேசன் (25). கூலி தொழிலாளியான இவர் தற்போது இலஞ்சி குமாரகோவில் அருகே உள்ள வள்ளியூர் பகுதியில் வசித்து வருகிறார்.
நேற்று காலையில் காசிமேஜர்புரத்தில் நடந்த உறவினரின் திருமண விழாவையொட்டி, நேற்று முன்தினம் கணேசன் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் இரவில் திருமண பேனர் வைப்பது தொடர்பாக பட்டுராஜ், கணேசன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.
எனினும் வீட்டுக்கு சென்ற கணேசன் மேலும் இருவரை அழைத்து கொண்டு அரிவாளுடன் வந்து பட்டுராஜிடம் மீண்டும் தகராறு செய்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த பட்டுராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதனை தடுக்க முயன்ற பட்டுராஜின் நண்பரான காசிமேஜர்புரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் அருண் (21) என்பவருக்கும் கைகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குற்றாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்றனர். படுகாயமடைந்த அருணை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இறந்த பட்டுராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். தலைமறைவான மேலும் சிலரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குற்றாலம் அருகே திருமண பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.