» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காசி கும்பமேளாவையொட்டி நெல்லையில் இருந்து சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கம்!
செவ்வாய் 7, ஜனவரி 2025 11:43:12 AM (IST)
காசியில் நடைபெற உள்ள கும்பமேளாவையொட்டி நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் காசியில் வருகிற 13-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கும்பமேளா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் காசி கங்கை நதியில் புனித நீராட பொதுமக்கள் விரும்புவார்கள். அவ்வாறு நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் ஏராளமானவர்கள் கும்பமேளாவில் கலந்து கொள்ள செல்வார்கள்.
இந்த பயணிகளின் வசதிக்காக நெல்லையில் இருந்து தென்காசி, ராஜபாளையம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக காசிக்கு சுற்றுலா ரயில் இயக்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சிறப்பு சுற்றுலா ரயில் நெல்லையில் இருந்து அடுத்த மாதம் 5-ம்தேதி அன்று அதிகாலை 1 மணிக்கு புறப்பட்டு மதுரை வந்து, மதுரையில் இருந்து அதே நாளில் காலை 6 மணிக்கு காசிக்கு புறப்படுகிறது.
இந்த ரயில் பிப்ரவரி 7-ம்தேதி மதியம் 12.30 மணிக்கு காசி பனாரஸ் சென்றடைகிறது. அன்று மாலை கங்கா ஆரத்தி பார்த்து மறுநாள் முழுவதும் பிராக்யாராஜ் பகுதியில் சுற்றுலா செல்லுதல், பிப்ரவரி 9-ம்தேதி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, காலபைரவர், சாரநாத் கோவில்களுக்கு சுற்றுலா செல்லுதல், 10-ம்தேதி அயோத்தியா சரயு நதி மற்றும் ராம ஜென்ம பூமி கோவிலில் வழிபாடு செய்து அன்று இரவு நெல்லைக்கு புறப்படும்படி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சுற்றுலா ரயில் பிப்ரவரி 13-ம்தேதி அதிகாலை 2.50 மணிக்கு மதுரை வந்து, காலை 7.30 மணிக்கு நெல்லை வந்தடைகிறது. இந்த ரயில் தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சுற்றுலாவுக்கு ரயில் பயண கட்டணம், தங்குமிடம், பயண வழிகாட்டி, பாதுகாப்பு அலுவலர், தென்னிந்திய உணவு வகைகள், உள்ளூர் சுற்றுலா போக்குவரத்து உட்பட குறைந்த கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.26 ஆயிரத்து 850 வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன ரயில் பெட்டி பயணம் மற்றும் உயர் சிறப்பு வசதிகளுக்கு கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.38 ஆயிரத்து 470 மற்றும் ரூ.47 ஆயிரத்து 900 வசூலிக்கப்படுகிறது. கட்டணத்திற்கு ஏற்ப ரயில் பயண வகுப்பு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து வசதி ஆகியவை வழங்கப்படுகிறது.