» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் 31 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு: ரூ.41 இலட்சம் மானியம் விடுவிப்பு

திங்கள் 24, பிப்ரவரி 2025 8:05:55 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் 31 முதல்வர் மருந்தகங்களுக்கு ரூ.41 இலட்சம் ரொக்க மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. ரூ.41 இலட்சத்திற்கு மருந்துகள் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
 
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.2.2025) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களுக்கு பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் "முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு , நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், தலைமையில் முதல்வர் மருந்தகத்தின் முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார்கள்.
 
தமிழ்நாடு முதலமைச்சர் 15.08.2024 அன்று நிகழ்த்திய சுதந்திர தினவிழா உரையில், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களுக்கான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாலும், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாலும் அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வாக பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் "முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும், இதை சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் மானியம் மற்றும் தேவையான கடனுதவி அரசால் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விருப்பமுள்ள B.Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து 1000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொழில்முனைவோருக்கு தலா 3 இலட்சம் ரூபாய் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் மானியமாக உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், கொள்முதல் செய்து வழங்கும் மருந்துகள் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பு வைக்க ஏதுவாக 38 மாவட்டங்களில் மாவட்ட மருந்து கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 20 தொழில் முனைவோர் மூலமாக முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு ரூ.30 இலட்சம் மானியமாகவும், மற்றும் 11 கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு ரூ.11 இலட்சம் மானியமாகவும், ஆக மொத்தம் மாவட்டத்தில் 31 முதல்வர் மருந்தகங்களுக்கு ரூ.41 இலட்சம் ரொக்க மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. மீதி ரூ.41 இலட்சத்திற்கு மருந்துகள் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், முதல்வர் மருந்தகத்திற்கு கடன் வசதி தேவைப்படும் தொழில் முனைவோருக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன் உதவிகள் பெறவும் வசதிகள் செய்து தரப்படுகிறது. மேலும், ஜெனரிக், பிராண்டட், சித்தா, ஆயுர்வேதிக் மற்றும் நியூட்ரா சூட்டிக்கல்ஸ் மருந்துகள் மற்றும் OTC product விற்பனை செய்யப்படும். முதல்வர் மருந்தகங்களில் பொதுமக்களுக்கு 20 % முதல் 90% வரை குறைந்த விலையிலும், மேலும் கூடுதலாக 25% வரை தள்ளுபடி விலையிலும் மருந்துகள் விற்பனை செய்யப்படும். இதன்மூலம் தனியார் மருத்துவமனை / மருந்தகங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கான மருந்துகளை குறைந்த விலையில் முதல்வர் மருந்தகங்களிலிருந்து வாங்கி பயன் பெற முடியும்.
இதுவரை திருநெல்வேலி மாவட்ட முதல்வர் மருந்தக சேமிப்புக் கிடங்கிற்கு தமிழ்நாடு மருத்துவ கழகத்திலிருந்து 93 வகை மருந்துகளும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு விற்பனை இணையத்திலிருந்து 150 வகையான மருந்துகளும் ஆக மொத்தம் 243 வகையான மருந்துகள் ரூ.76.34 இலட்சத்திற்கு பெறப்பட்டுள்ளது.
இதன்மூலம், B.Pharm/D.Pharm படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதால் மருந்து வாங்க வந்த பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப் , நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன் , திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் , துணை மேயர் கே.ஆர்.ராஜூ , மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் , மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா , திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா , உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.அம்பிகா ஜெயின், முன்னாள் சட்டமன்ற பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் , முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் , கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் முருகேசன் , மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திலிப்குமார் , துணைப் பதிவாளர் சுப்பையா மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திருநெல்வேலி.


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள் குடிமகன்Feb 25, 2025 - 08:31:51 AM | Posted IP 162.1*****

அப்படியே முதல்வர் குடியகம் டாஸ்மாக் திறக்க முடியாதா? கொழுப்பு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory