» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீரவநல்லூர் அருகே 5 பேரை வெட்டிக்கொன்ற 11 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:59:16 AM (IST)

வீரவநல்லூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 5 பேரை வெட்டிக்கொன்ற வழக்கில் தந்தை-மகன்கள் உள்பட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே அத்தாளநல்லூர் கோட்டையடி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணத்தேவர். இவருடைய மகன் சின்னத்துரை என்ற நவநீதகிருஷ்ணன் (38). விவசாயியான இவருக்கும், உப்புவாணி முத்தூரைச் சேர்ந்த மாயாண்டிதேவர் (84), அவருடைய தம்பி சிவனுபாண்டி (74) குடும்பத்தினருக்கும் அத்தாளநல்லூரில் வயல்கள் உள்ளன. இந்த வயல்கள் தொடர்பாக அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது.

கடந்த 2008-ம் ஆண்டு உப்புவாணிமுத்தூர் சுடலைமாடன் கோவிலில் சின்னத்துரை குடித்துவிட்டு சாமியாடியதை மாயாண்டிதேவர் குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் சின்னத்துரை குடும்பத்தினருக்கும், மாயாண்டிதேவர் குடும்பத்தினருக்கும் இடையே இருந்த பகை மேலும் அதிகரித்தது. மேலும் சின்னத்துரையின் ஆட்டையும், அவருடைய வீட்டில் இருந்த காணிக்கை பணத்தையும் மாயாண்டி தேவர் திருடியதாக சின்னத்துரை குற்றம்சாட்டினார். 

இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 10-3-2009 அன்று வயலில் அறுவடை நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சென்ற மாயாண்டிதேவர், அவருடைய மகன்கள் பெரியகுட்டி என்ற சொர்ணபாண்டி (60), சின்னகுட்டி என்ற பொன்னுத்துரை (51), துரை என்ற முத்துப்பாண்டி (63), முருகன் (46), மாயாண்டிதேவரின் தம்பி சிவனுபாண்டியன் (74) மற்றும் அவருடைய குடும்பத்தினர் சின்னத்துரை குடும்பத்தினரிடம் தகராறு செய்தனர்.

இதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அரிவாளால் மாறி மாறி வெட்டினர். இதில் சின்னத்துரை, அவருடைய அக்காள் பாண்டியம்மாள், இவருடைய மகன் மணிகண்டன், உறவினரான முத்துப்பாண்டி ஆகியோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போதைய டிஎஸ்பி ராஜ்மோகன் விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக மாயாண்டிதேவர், அவருடைய மகன்கள் பெரியகுட்டி என்ற சொர்ணபாண்டி, சின்னகுட்டி என்ற பொன்னுத்துரை, துரை என்ற முத்துப்பாண்டி, முருகன், அவருடைய தம்பி சிவனுபாண்டி, சிவனுபாண்டி மகன்கள் கருத்தப்பாண்டி, நயினார் என்ற ஆறுமுக நயினார், சுப்பிரமணியன், உறவினர்கள் மகாராஜன், கருத்தபாண்டி, இசக்கி தேவர், ஆதிமூலகிருஷ்ணன் ஆகிய 13 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது நெல்லை 3-வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை நீதிபதி பன்னீர்செல்வம் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட மாயாண்டி தேவர், அவருடைய மகன்கள் பெரியகுட்டி என்ற சொர்ணபாண்டி, துரை என்ற முத்துப்பாண்டி, முருகன், உறவினர்களான கருத்தப்பாண்டி, நயினார் என்ற ஆறுமுக நயினார், சுப்பிரமணியன், மகாராஜன், கருத்தபாண்டி, ஆதிமூலகிருஷ்ணன் ஆகிய 10 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனையும், தலா ரூ.5,500 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். 4 ஆயுள் தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

சின்னகுட்டி, சிவனுபாண்டி, இசக்கிதேவர் ஆகிய 3 பேரும் வழக்கு நடந்தபோது இறந்து விட்டனர். இந்த வழக்கில் அரசு வக்கீல் சூரசங்கரவேல் ஆஜரானார். இதைப்போல் எதிர் தரப்பினர் தாக்கியதில் மாயாண்டிதேவரின் உறவினரான குணசேகரன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சின்னத்துரையின் தம்பி அர்ச்சுனனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சாட்சிகளை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க உதவி புரிந்த வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜீத் ஆனந்த், கோர்ட்டு ஏட்டு செல்வகுமார் ஆகியோரை நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory