» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் போதை மீட்பு சிகிச்சை - மறுவாழ்வு மையங்கள் துவக்க விழா

வியாழன் 27, பிப்ரவரி 2025 5:43:03 PM (IST)



திருநெல்வேலியில் "கலங்கரை" ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.02.2025) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் "கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

அதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப் முன்னிலையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தினை தொடங்கி வைத்து, குத்துவிளக்கேற்றினார்.

போதைப் பொருள் பயன்பாடு என்பது தனி மனிதரின் ஆரோக்கியத்திற்கும், குடும்ப நலத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் பெரிய தடையாக உள்ளது. இத்தடையை உடைத்து, போதையில்லா சமுதாயத்தை உருவாக்கிட "போதை ஒழியட்டும், வாழ்க்கைப் பாதை ஒளிரட்டும், போதை இல்லா தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்” என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, போதைப் பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக மீட்டு, சமூகத்தில் நலமுடன் வாழ தேவையான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்தகைய உயரிய நோக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கிட தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 25 "கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் திறந்து வைத்தார்கள்.

ஒவ்வொரு மையத்திற்கும் மனநல மருத்துவர் தலைமையில், ஆற்றுப்படுத்துநர், சமூகப் பணியாளர், செவிலியர், பாதுகாவலர், மருத்துவமனை பணியாளர், துப்புரவு பணியாளர் என ஆறு மனநல மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, தரமான சிகிச்சை வழங்கப்படும்.

அனைத்து மையங்களிலும் ஒரே வகையில் சிறப்பான சேவைகளை வழங்குவதற்காக ‘நிலையான செயல் நடைமுறைகள்’ வரையறுக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சை முறைகள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி சேவைகள், பொழுதுபோக்கு வசதிகள், உள்ளரங்க விளையாட்டு குழு சிகிச்சை, குடும்பத்தினருக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட மறுவாழ்வு சேவைகளும் வழங்கப்படும்.

அதனடிப்படையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் "கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறந்து வைக்கப்பட்டது.

இம்மையத்தில் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டோடு போதை மீட்பிற்கான தொடர் சிகிச்சை எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்படவுள்ளதோடு, இம்மையத்தில் போதை பழக்கத்தில் இருந்து மீள தயங்காமல் "நட்புடன் உங்களோடு மனநல சேவை”–ன் கட்டணமில்லா தொலைபேசி எண்.14416-ஐ தொடர்பு கொள்ளலாம்.

தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதற்கு முன்பாக, போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல சிகிச்சை பிரிவுடன் இணைந்திருந்தது இன்று தமிழ்நாடு முதலமைச்சர் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கலங்கரை என்ற பெயரில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தினை தனி சிகிச்சை பிரிவாக அமைத்து உளவியல் சிகிச்சை முறைகள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி சேவைகள், பொழுதுபோக்கு வசதிகள், உள்ளரங்க விளையாட்டு குழு சிகிச்சை, குடும்பத்தினருக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட மறுவாழ்வு சேவைகளும் வழங்கப்படவுள்ளது. இதுபோன்ற தனிபிரிவினை தொடங்கி வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனநல பேராசிரியர் ரமேஷ் பூபதி நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன், துணை முதல்வர் சுரேந்திரன், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) லதா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) கீதா ராணி, மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், மனநல பேராசிரியர் ரமேஷ் பூபதி, உதவி செயற்பொறியாளர் ராமகோமதி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory