» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பலத்த மழை : பொது மக்கள் மகிழ்ச்சி

வியாழன் 27, பிப்ரவரி 2025 7:37:25 PM (IST)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் தாழ்வான இடங்களில் குளம் போன்று மழைநீர் தேங்கியது.

சுமத்ரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் காற்று சுழற்சி உருவாகி இருப்பதால், அது குமரி மற்றும் மாலத்தீவு நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் 3 நாட்கள் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

அதன்படி, நேற்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. நெல்லை மாநகர பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. மதியம் 2 மணியளவில் நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், பாளையங்கோட்டை, டவுன் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.

மாலை 4 மணியளவில் பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போன்று தண்ணீர் தேங்கியது. பொதுமக்கள் குடைகள் பிடித்தவாறு சாலையில் நடந்து சென்றனர்.

மாலையில் பள்ளிக்கூடம் முடிவடையும் நேரத்தில் மழை பெய்ததால் சில மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தவாறு வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். கடந்த சில நாட்களாக கோடையை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று மாலை 4 மணி உள்ள நிலவரப்படி, நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக நாங்குநேரியில் 13 மில்லி மீட்டர் மழை பதிவானது. பாளையங்கோட்டையில் 5 மி.மீ.-ம், நெல்லை மற்றும் மணிமுத்தாறு பகுதிகளில் தலா 1.80 மி.மீ.-ம், அம்பையில் 0.20 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள ராமநதி, கருப்பாநதி அணைகளில் நீர்பிடிப்பு பகுதிகளில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. ராமநதியில் 7 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், மணியாச்சி, கயத்தாறு சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகலில் சிறிது நேரம் கனமழை பெய்தது. கோவில்பட்டியில் பெய்த மழையில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 11.50 மில்லிமீட்டர் மழை பெய்தது. சூரங்குடி, கீழ அரசடியில் விட்டு விட்டு லேசான சாரல் அடித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory