» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை-தென்காசியில் 3-வது நாளாக கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

ஞாயிறு 2, மார்ச் 2025 10:57:44 AM (IST)



நெல்லை-தென்காசியில் 3-வது நாளாக கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்களில் மழை ெபய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்தது. அதாவது கடந்த 27-ந் தேதி பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினமும் மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை கொட்டியது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. குறிப்பாக பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது.

நேற்று 3-வது நாளாக நெல்லையில் பலத்த மழை பெய்தது. காலையில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. பிற்பகலில் பலத்த மழை பெய்தது. நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், தாழையூத்து, டவுன், பேட்டை, மேலப்பாளையம், பாளையங்கோட்டை, கே.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்தது.

இதேபோல் மாவட்டத்தில் அம்பை, சேரன்மாதேவி, மணிமுத்தாறு, நாங்குநேரி, பாபநாசம் உளளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. சாலையில் குடைபிடித்தபடி பொதுமக்கள் நடந்தும் சென்றனர்.

இந்த மழை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 136 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு 649 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணை நீர்மட்டம் 80.60 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு 1,100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 81.36 அடியில் இருந்து 5 அடி உயர்ந்து 86.35 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 98 கன அடியாக இருந்த நிலையில் நேற்று நீர்வரத்து 288 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு 435 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணை நீர்மட்டம் 87.76 அடியாக உள்ளது. இதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகளுக்கும் நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் 3-வது நாளாக மழை பெய்தது. தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவியில் காட்டாற்று வெள்ளம் போல் செம்மண் கலந்து தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. மேலும் கற்கள், மரத்துண்டுகளும் அடித்து வரப்பட்டன. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் அருவிகளில் தண்ணீர் சீராகும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். மாலை 5 மணி அளவில் புலியருவியில் தண்ணீர் வரத்து சீரானதால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டு இருந்தனர். தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழையின் காரணமாக நெற்பயிர்கள் முழுவதும் வயல்களில் சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு: அம்பை -19, சேரன்மாதேவி -29, மணிமுத்தாறு -24, நாங்குநேரி -8, பாளையங்கோட்டை -13, பாபநாசம் -48, நெல்லை -11, சேர்வலாறு -42, கன்னடியன் அணைக்கட்டு -20, களக்காடு -36, தென்காசி 25, கடனா -7, ராமநதி -30, ஆய்குடி -40, கருப்பாநதி -14, சங்கரன்கோவில் -1, செங்கோட்டை -54, குண்டாறு -36, அடவிநயினார் -8, சிவகிரி -2.

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் அமைந்திருக்கும் ஊத்து பகுதியானது அதிக மழைப்பொழிவு பெறும் இடமாகும். இங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 81 மில்லி மீட்டர் அதாவது 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதே போல் அங்குள்ள நாலுமுக்கு 72 மில்லி மீட்டர், காக்காச்சி -66 மில்லி மீட்டர், மாஞ்சோலை 55 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory