» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் பள்ளி மாணவன் கைது!

சனி 22, மார்ச் 2025 11:35:40 AM (IST)

நெல்லையில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி படுகொலை வழக்கு தொடர்பாக பிளஸ் 1 மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். 

நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி(60). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான இவர் டவுனில் உள்ள ஒரு பள்ளி வாசலில் முத்தவல்லியாக இருந்து வந்தார். இவர் கடந்த 18-ந்தேதி அதிகாலை ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அருகே உள்ள ஜாமியா தைக்கா பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.

இதுகுறித்து டவுன் போலீசார் நடத்திய விசாரணையில் அவருக்கும், தொட்டிப்பாலம் தெருவில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் இடையே இருந்து வந்த இடப்பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்த நிலையில், 2 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று கோர்ட்டில் மீண்டும் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை தனிப்படையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த நிலையில் அவருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கார்த்திக், அக்பர் ஷாவிடம் நடத்திய விசாரணையில், அவர்களது உறவினரான 16 வயது சிறுவன் ஒருவன் இந்த கொலை சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று மாலையில் சிறுவனை பிடித்து விசாரித்தனர். பிளஸ்-1 படிக்கும் அந்த சிறுவன், சம்பவத்தன்று ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு புறப்பட்டதை கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தது தெரியவந்தது.

இதையடுத்து மாணவனையும் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள நூர்நிஷாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory