» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 466 பேருக்கு பணி நியமன ஆணை: சபாநாயகர் வழங்கினார்!
சனி 22, மார்ச் 2025 4:39:42 PM (IST)

திருநெல்வேலியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் 466பேருக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, தூய யோவான் கல்லூரிகளில் இன்று (22.03.2025) மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற்ற நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இம்முகாமில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, பேசியதாவது : தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்றுத் துறையினரால் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மே 2021 முதல் 3 கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் டாடா சோலார் பவர் நிறுவனத்திற்கென பிரத்தியேகமான வேலைவாய்ப்பு முகாம் உட்பட ஒன்பது மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இம்முகாம்களில் இதுவரை 945 வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு 6316 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து இன்று நடத்திய பத்தாவது வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலை நாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இன்று, நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 116 வேலை அளிக்கும் நிறுவனங்கள் பல்வேறு பிரிவுகளில் வேலை நாடுனர்களை தேர்வு செய்ய இம்முகாமிற்கு வருகை புரிந்துள்ளனர். நடைபெற்ற முகாமில் 466 நபர்கள் பணிநியமன ஆணைகள் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் பட்டப்படிப்பு படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் புதுமை பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்பட்டு வருவதோடு, என்ன படிப்பு படிக்காலம் என்பதை விட என்ன படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மேல்நிலை இரண்டாம் ஆண்டு படித்து முடித்தவுடன் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் 17 இலட்சம் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. 32 தொழிற்பூங்காக்கள் 28 தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது. தொழில் வளத்தை பெருக்குவதன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதால், தமிழ்நாட்டில் என்ன படித்தாலும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
மேலும் அரசு பணிக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணத்தோடு பயிலும் மாணவர்களுக்கு பிரத்தியேகமாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் சிறப்பு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான மாதிரி தேர்வு நடத்தி கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 243 மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு அரசுத்துறைகளில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்கள். ஒவ்வொரு மாணவர்களும் தங்களது கல்வி கனவை நிறைவேற்றும் வகையில் கல்வி அறிவும், அதற்கு தேவையான வேலைவாய்ப்பினையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசினார்கள்.
இம்முகாமில், மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்ததாவது: ஒவ்வொரு மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 43 முகாம்கள் நடத்தப்பட்டு, அதன்மூலம் 980 வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை வீதம் 9 மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
இன்றைய வேலைவாய்ப்பு பெறும் அனைவரும் இந்த வேலைவாய்ப்புடன் நின்றுவிடாமல் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஏஐ ஜெனரேட்டிவ் தொழில்நுட்ப காலத்தில் இனி பயணிக்க இருக்கிறோம் என்பதை மறந்து விட வேண்டாம். ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்படும் வேலைவாய்ப்பு மாற்றங்கள் குறித்து அறிந்து கொண்டு உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்பத்துடன் 4.0 என்ற தகவல் தொழில்நுட்பத்தினை தெரிந்து கொண்டு இனிவரும் காலங்களில் அதற்கு தகுந்தாற்போல் உங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாளர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) (பொ) மரு.கா.சண்முகசுந்தர், கல்லூரி செயலர் ஜெயசந்திரன், கல்லூரி துணை முதல்வர் பர்னபாஸ் ஜேக்கப், உதவி இயக்குநர்கள் (வேலைவாய்ப்பு) மரிய சகாய அந்தோணி, ஹரிபாஸ்கர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் பிராங்கிளின், களக்காடு நகர்மன்ற துணைத் தலைவர் பி.சி.ராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கனகராஜ், முக்கிய பிரமுகர் ஜோசப் பெல்சி, சித்திக் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், வேலைநாடுநர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி கோவில் கும்பாபிஷேகம் நடத்த தடை : உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:09:33 PM (IST)

நெல்லையில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி துவக்கம்
புதன் 2, ஏப்ரல் 2025 5:56:01 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 5:21:32 PM (IST)

சொத்துத்தகராறில் தந்தையை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்: நெல்லை அருகே பயங்கரம்!
புதன் 2, ஏப்ரல் 2025 8:17:04 AM (IST)

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:27:13 PM (IST)

அதிமுக - பாஜக கூட்டணி? நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:42:15 PM (IST)
