» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நீண்ட நாட்களாக குடியிருப்புகளுக்கு சிறப்பு வரன்முறை பட்டா: SC, ST ஆணையத் தலைவர் தகவல்
திங்கள் 24, மார்ச் 2025 5:49:44 PM (IST)

நீண்ட நாட்களாக குடியிருப்புகளுக்கு சிறப்பு வரன்முறை பட்டா வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கணக்கெடுக்கும் பணியில் தங்களது பெயர் உள்ளதா என்பது குறித்து கிராம நிர்வாக அலுவலகத்தில் நேரில் சென்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைவர் ச.தமிழ்வாணன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைவர் மேனாள் நீதிபதி நீதியரசர் ச.தமிழ்வாணன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய துணைத் தலைவர் இமயம் வெ. அண்ணாமலை, குழு உறுப்பினர்கள் ஜே.செல்வகுமார், சு.ஆனந்தராஜ், இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் இன்று (24.03.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப்பின், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைவர் மேனாள் நீதிபதி நீதியரசர் ச.தமிழ்வாணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும். தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் அமைக்கப்பட்டு முழுநேர ஆணையமாக செயல்பட்டு வருகிறது.
இன்றையதினம் நடத்தப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக சென்று சேர்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் போன்ற பல்வேறு அடிப்படையான வசதிகள் சரியான முறையில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஆதிதிராவிடர் மக்களின் கோரிக்கைகள் கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் மூலம் அவர்களின் கோரிக்கைகள் சரிசெய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிராம முன்னோடித்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்தும், பொதுமக்கள் வழங்கியுள்ள மனுக்களுக்கு ஒருவார காலத்தில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளை கையாளுவது குறித்தும், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட நிலம், வீட்டுமனை தொடர்பாக ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் நீண்ட நாட்களாக குடியிருப்புகளுக்கு சிறப்பு வரன்முறை பட்டா வழங்க வேண்டுமென்ற உயரிய நோக்கில் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, கணக்கெடுக்கும் பணியில் தங்களது பெயர் உள்ளதா என்பது குறித்து கிராம நிர்வாக அலுவலகத்தில் நேரில் சென்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைவர் மேனாள் நீதிபதி நீதியரசர் ச.தமிழ்வாணன் தெரிவித்தார்.
இன்றையதினம், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருடைய வாரிசுதாரருக்கு அரசு பணி நியமன ஆணையினையும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு நபர்களுக்கு ரூ.2,17,500/- தீருதவித் தொகையினையும், தீண்டாமை இல்லாத கிராமத்திற்கு ரூ.10 இலட்சம் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.10 இலட்சம் வன்னிக்கோனேந்தல் மற்றும் முதுமொத்தான்மொழி கிராமத்திற்கும், மூன்று பயனாளிகளுக்கு தலா ரூ.6,680/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களும், 10 தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகளும், 10 தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் என மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ.22.37 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைவர் மேனாள் நீதிபதி நீதியரசர் ச.தமிழ்வாணன் வழங்கினார்.
தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த மாணவன் தாக்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அம்மாணவனை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைவர் மேனாள் நீதிபதி நீதியரசர் ச.தமிழ்வாணன் மற்றும் ஆணையக் குழுவினர் நேரில் சந்தித்து, மாணவனின் பெற்றோர்களிடம் ஆறுதல் கூறியதோடு, அந்த மாணவனின் கல்விக்கான உத்தரவினையும், வேலைவாய்ப்பிற்கான உத்தரவினையும் இந்த ஆணையத்தின் மூலம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதி பாலன், கோட்டாட்சியர்கள் கண்ணா கருப்பையா (திருநெல்வேலி), ராஜசெல்வி (சேரன்மகாதேவி (பொ)), மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்கள் அன்பழகன் (திருநெல்வேலி), பென்னட் ஆசீர் (தூத்துக்குடி) உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)

நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ருசிகரம் : தந்தையும் மகனும் தேர்வெழுதினர்!!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:13:11 AM (IST)

மாநில வில் வித்தை போட்டி: வீரவநல்லூர் மாணவனுக்கு தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:09:21 AM (IST)

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : திரளானோர் தரிசனம்!
சனி 15, நவம்பர் 2025 11:51:49 AM (IST)




