» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணையில் தாமதம் ஏன்? உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விளக்கம்

வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:22:22 AM (IST)

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணையில் தாமதம் ஏன்? என்பது பற்றி மதுரை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விளக்கம் அளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்கு போலீசார் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். 

இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. பெண் போலீசார் ரேவதி, பியூலா உள்பட பல்வேறு முக்கிய சாட்சிகள் தங்களது சாட்சியங்களை பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சக்திவேல் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சாத்தான்குளம் வழக்கு விசாரணை தாமதமாவது ஏன்? என கேள்வி எழுப்பினார். அதற்கு சி.பி.ஐ. வக்கீல் ஆஜராகி, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. எனவே பொறுப்பு நீதிபதிதான் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். 

இந்த வழக்கில் கைதான போலீசார் சார்பில் ஒவ்வொரு சாட்சியும் தனித்தனியாக விசாரிக்கப்படுகின்றனர். மனுதாரர் கூட இந்த வழக்கின் சாட்சிகளை நேரடியாக விசாரித்து வருகிறார். இதன் காரணமாக விசாரணை தாமதமாகி வருகிறது. இந்த வழக்கு விசரணையை 2 மாதத்தில் முடிக்க மதுரை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டு உள்ளது என தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இதுகுறித்து சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory