» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வகுப்பறையில் மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

புதன் 16, ஏப்ரல் 2025 12:23:36 PM (IST)

பாளையங்கோட்டையில் பள்ளி மாணவனை வெட்டிய சக மாணவனை வரும் 29-ம் தேதி வரை 14 நாட்கள் சீர்திருத்த குழுமத்தில் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நெல்லை பாளையங்கோட்டையில் ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (மெயின்) உள்ளது. இந்த பள்ளியில் நேற்று காலை வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆசிரியர்கள் தேர்வுக்காக மாணவர்களை படிக்க வைத்துக்கொண்டு இருந்தனர். காலை 10.30 மணிக்கு 8-ம் வகுப்புக்கான ஒரு வகுப்பறையில் மாணவன் ஒருவர் தனது புத்தகப் பையில் இருந்து அரிவாளை வெளியே எடுத்தான்.

திடீரென முன்பெஞ்சில் அமர்ந்திருந்த சக மாணவனை சரமாரியாக வெட்டினான். இதில் அந்த மாணவனுக்கு தலை, தோள்பட்டை மற்றும் 2 கைகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை ரேவதி வேகமாக வந்து மாணவனை தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் 2 கைகளிலும் அரிவாள் வெட்டு விழுந்தது.

மாணவன் ரத்தவெள்ளத்தில் நின்றதை பார்த்து பதறிப்போன சக மாணவ-மாணவிகள் கூச்சலிட்டனர். உடனடியாக மற்ற வகுப்பறைகளில் இருந்த ஆசிரியைகள் அங்கு ஓடி வந்தனர். உடனே அவர்கள், காயம் அடைந்த மாணவன் மற்றும் ஆசிரியை ரேவதியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2 பேரும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே, அரிவாளால் வெட்டிய மாணவன் அங்கிருந்து வேகமாக வெளியேறி அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு நடந்தே சென்று சரண் அடைந்தான். போலீசார் அவனிடம் விசாரித்தனர். விசாரணையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட 2 மாணவர்களுக்கு இடையே பென்சில் யாருடையது என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து 2 தரப்பு பெற்றோரையும் ஆசிரியர்கள் வரவழைத்து பேசி உள்ளனர்.

மேலும் வகுப்பாசிரியர் இருவரையும் தனித்தனியே வெவ்வேறு இடங்களில் அமர வைத்துள்ளார். ஆனால், வெட்டிய மாணவன் இந்த பிரச்சினையை மனதில் வைத்துக் கொண்டு நேற்று அரிவாளை எடுத்துவந்து வெட்டியது தெரியவந்ததாக போலீசார் கூறினார்கள். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரிவாளால் வெட்டிய சக மாணவனை கைது செய்தனர். பின்னர் அவன் சிறார் குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.

இந்த வழக்கு நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிறுவர் சீர்திருத்த குழுமத்தில் நீதித்துறை நடுவர் தலைமையில் நேற்று இரவு விசாரணை நடைபெற்றது. அப்போது மாணவனை வரும் 29-ம் தேதி வரை 14 நாட்கள் சீர்திருத்த குழுமத்தில் காவலில் வைக்க நடுவர் உத்தரவிட்டார். மேலும் தகுதியான நபர்களைக் கொண்டு மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

SivaSriApr 16, 2025 - 05:23:24 PM | Posted IP 104.2*****

குழந்தைகள் இவ்வளவு தூரம் தவறான பாதையில் செல்வது ஆசிரியர் க கை கள் முடக்கப்பட்டதால் விஞ்ஞானம் வளர்ச்சி அடைய பாதுகாப்பு அதிகப்படுத்த வேண்டும்.அன்று எங்கோ ஓர் ஊரில் வெட்டு குத்து என்று அந்த நிகழ்வை கேட்டதும் அந்த ஊருக்கு ஓர் புள்ளி வைத்து விடுவார்கள்.மோசமான ஊர் என்று.இன்று போதைப் பொருட்கள் அதிக புழக்கம்.பசங்க படத்தை பார்த்திருப்பீர்கள்.மாணவர்கள் ஒருவனுக்கு ஒருவன் சண்டை இது தூண்டப்படும்.ஊருக்கு ஊர் சிறுவர்கள் பழக்கம் பெரிய நபரிடம் அப்போது நீ யா நா னா நீ செஞ்சிட்டு வா பார்த்துக்கலாம்.அவர்கள் Juvenile justice bord, child welfare committee சில மாதம் தான் சீர்திருத்த பணிக்கு இது தெரிந்தே 3 மாதம் தான்.அதன் பின்னர் பெற்றோர் வசம் அனுப்பி வைக்கப் படுவர்.இதெல்லாம் புரிந்து சிறுவர்களை கொலை குற்றத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.அரசு சட்டத்தை கையில் எடுக்கனும் ஆசிரியர்கள் பிரம்பு பயன்படுத்தலாம்.அப்படி அடிக்க கூடாது என்றால் நீயே திருத்திக் கோ எந்த மாணவனும் வயது 18முடியும் வரை கல்வி சாலையில் தான் கடைகளில் குழந்தை தொழிலாளர் பயன் படுத்த கூடாது அப்படி வைத்து இருந்தால் தண்டனை பணம் court labour department க்கு எல்லாம் போக கூடாது.அருகில் உள்ள பள்ளி கூடத்தில் இரண்டுஏழை மாணவர்களைக்கு கல்வி செலவை பொறுப்பு எடுக்க உத்தரவு பிறப்பித்தார் கல்வி ஒழுக்கம் சிறந்து விளங்கும்.குற்ற செயல்கள் குறையும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory