» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் உரிய அனுமதியின்றி செயல்படுவதால் அதனை இயக்கக்கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் ஏராளமான பயணிகள் வந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்களில் ஏறிச்செல்கின்றனர். மேலும் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளும் இங்கு அதிகளவில் வருவதால் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் நெல்லை சங்கர்நகரை சேர்ந்த முத்துராமன் என்பவர் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், ‘‘நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் உள்ள வணிக வளாகங்கள் சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய இசைவாணை இன்றி கட்டப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி அங்குள்ள கடைகள், வாகன காப்பகம் திறக்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதன்பேரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த மாதம் 26-ந்தேதி இந்த பஸ் நிலையத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது அங்கு உரிய அனுமதியின்றி உணவகம், இருப்பு அறை, போக்குவரத்து ஓட்டுனர்கள் அறை, கழிப்பறை மற்றும் வாகன காப்பகம் திறக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து புகார் தெரிவித்த முத்துராமனுக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நெல்லை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கிருஷ்ணபாபு பதில் அறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழல் அனுமதி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இசைவாணை போன்ற அரசு துறைகளின் அனுமதி இல்லாமல் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது. அங்கு திறக்கப்பட்டுள்ள வணிக செயல்பாடுகளை உடனடியாக மூடவேண்டும்.
இதுகுறித்து நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு வழிகாட்டுதல்கள் வழங்க, சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாசு கட்டுபாட்டு வாரியத்தின் அறிக்கையில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது என குறிப்பிட்டப்பட்டிருந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)

மீட்கப்பட்ட ஆட்டோவை ஒப்படைக்க லஞ்சம் கேட்டதாக புகார்: எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்
வியாழன் 11, செப்டம்பர் 2025 12:31:55 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: ஆட்சியர் ஆய்வு
புதன் 10, செப்டம்பர் 2025 4:50:46 PM (IST)

திமுக அரசின் அலட்சியத்தால் தாமிரபரணி முற்றிலும் சீரழிந்துள்ளது: நயினார் நாகேந்திரன் அறிக்கை
புதன் 10, செப்டம்பர் 2025 3:50:08 PM (IST)
