» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!

திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)



நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின்குமார் தெரிவித்தார்.

தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் நேற்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தார். அங்கு நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதிதாக அமைக்கப்பட்டு வரும் 6-வது நடைமேடை மற்றும் அதனுடன் இணைக்கப்பட உள்ள டவுன் 3-வது தண்டவாள பாதை ஆகியவற்றின் வரைபடம் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்து சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை கோட்டத்தில் நடைபெறும் ரயில்வே மேம்பாட்டு பணிகளை 2 நாட்களாக பார்வையிட்டு வருகிறோம். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில்வே மேம்பாட்டு பணிகள் 2 விதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ரூ.25 கோடி, ரூ.30 கோடி என சிறிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மதுரை, ராமேசுவரம், நெல்லை ஆகிய பெரிய ரயில் நிலையங்கள் ரூ.100 கோடி முதல் ரூ.300 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெறும். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் ரூ.100 கோடி செலவில் விரைவில் நடக்க உள்ளது. இங்கு முதலாவது நடைமேடையில் உள்ள வசதிகள் போன்று, மற்ற நடைமேடைகளிலும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

நெல்லையில் இருந்து முக்கிய ஊர்களுக்கு புதிய ரயில்கள் இயக்குவது குறித்து ரயில்வே வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும். பொது மக்களின் தேவை, பயணிகள் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் புதிய ரயில்கள் இயக்கப்படும். நெல்லை- பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்குவது குறித்தும் ரயில்வே வாரியம்தான் முடிவு செய்யும்.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 6-வது நடைமேடை அமைக்கும் பணிகள் வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிவடைந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

M BabuNov 17, 2025 - 03:30:38 PM | Posted IP 162.1*****

ukkara 4 chair potta pothum athuku 4 fan mothama 100 chair 100 fan pothume nanga yenna anga poi thanga va porom yethuku 100 c makkal kasula appad yenna than panuvenga purilaye

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory