» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!

வியாழன் 27, நவம்பர் 2025 12:12:42 PM (IST)

திருநேல்வேலி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு இரு சக்கர வாகன பழுதுபார்ப்பு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதுபார்ப்பு தொடர்பான 30 நாட்கள் கொண்ட இலவச பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 

இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் உதவியுடன் நமது மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) மூலம், கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மகாராஜநகரில் செயல்பட்டு வருகிறது. திருநேல்வேலி மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கத்துடன் தற்போது இப்பயிற்சி நிறுவனம் மூலம் இரு சக்கர வாகன பழுதுபார்ப்பு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதுபார்ப்பு தொடர்பான 30 நாட்கள் கொண்ட இலவச பயிற்சிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. 

இப்பயிற்சியின்போது கூடுதலாக, சுயதொழில் துவங்குதல், பொருத்தமான வேலை வாய்ப்புகளை அடையாளம் காணுதல், வணிகத் திட்டம் தயாரித்தல், சந்தைப்படுத்துதல் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறந்த குணங்களை உருவாக்குதல் குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியின்போது பயிற்சி குறித்த செயல் விளக்க வீடியோக்கள், தொழில்துறை உபகரணங்களின் பயன்பாடு, கணினி வகுப்புகள் மற்றும் மென் திறன் பயிற்சி மற்றும் நடைமுறை வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி முறைகள் பின்பற்றப்படுவதுடன் தொடர்புடைய துறையில் நிபுணர்களாக இருக்கும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களால் பயிற்சி நடத்தப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், பயிற்சியின் போது, முக்கிய தொழில்துறை நிறுவனங்களுக்கு களப்பயணங்கள் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் வெற்றிக்கதைகள் நேரடியாகச் சொல்லப்படுகின்றன. இளைஞர்களை குழுக்களாக அழைத்துச் சென்று சந்தை ஆராய்ச்சிக்காகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

பயிற்சியின் முடிவில், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பயிற்சியை முடித்த இளைஞர்கள் சுயதொழிலில் ஈடுபட உதவும் வகையில், பயிற்சி மைய அதிகாரிகளால் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பயிற்சியை முடித்த பிறகு இளைஞர்களுக்கு சுயதொழிலில் ஈடுபட கடன் உதவி தேவைப்பட்டால், வங்கிகளில் கடன் பெற பயற்சி மைய அதிகாரிகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இப்பயிற்சிகள் அனைத்தும் 100% செய்முறைப்பயிற்சிகளாக இருக்கும். மேலும், பயிற்சி பங்கேற்பாளர்களுக்கு சீருடை, அடையாள அட்டை, தேநீர், காலை உணவு, மதிய உணவு மற்றும் பயிற்சிக்கு தேவையான அனைத்து உதவிகளும் இலவசமாக வழங்கப்படும். இப்பயிற்சியில் 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள கிராமப்புற இளைஞர்கள் (ஆண், பெண் இருபாலரும்) கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இப்பயிற்சியில் கலந்து கொள்ள குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. 

ஆர்வமுள்ள இளைஞர்கள் திருநெல்வேலி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மகாராஜநகர் கிளையின் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி (A63, 5-வது குறுக்குத் தெரு, மகாராஜநகர், திருநெல்வேலி - 627011) மையத்தினை அணுகலாம். மேலும், இப்பயிற்சிகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தினை 75399 38413, 75399 42413 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory