» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத புதிய திட்டங்கள் தமிழகத்தில்... அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
திங்கள் 1, டிசம்பர் 2025 5:05:07 PM (IST)

இந்தியாவில் வேறுஎந்த மாநிலத்திலும் இல்லாத புதிய திட்டங்களை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்பேசினார்.
திருநெல்வேலி மாவட்டம் இராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ‘எங்கள் கல்லூரி எங்கள் பெருமை” முன்னாள் மாணாக்கர்கள் சங்கத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்து முன்னாள் மாணாக்கர்கள் சங்கத்திற்கு புத்தகங்கள், மடிக்கணினிகள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், தையல் இயந்திரங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை நன்கொடையாக வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உயர் கல்வித் துறையில் எண்ணற்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட காரணத்தினால் இந்தியாவில் வேற எந்த மாநிலத்திலும் இல்லாத புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் என்ற திட்டத்தை அறிவித்தது மட்டுமில்லாமல் அதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறார்கள்.
பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்வதற்கும் அவர்களை ஊக்குவிப்பதற்கும் புதுமைப்பெண் திட்டம் உதவியாக அமைந்துள்ளது என மாணவியர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி முன்னாள் மாணாக்கார்கள் சங்கம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. 1970-ஆம் ஆண்டில் 69 மாணவியரைக் கொண்டு தொடங்கப்பட்ட இராணி அண்ணா மகளிர் கல்லூரி இன்று சுமார் 4000 மாணவியர்களுக்கு 15 இளநிலை பாடப்பிரிவுகளையும் 13 முதுநிலைப் பாடப்பிரிவுகளையும் 10 ஆராய்ச்சி துறைகளையும் கொண்டு எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகளுக்கு உயர்கல்வி வழங்கி வருகிறது.
முந்தைய காலங்களில் குறுகுல கல்வியில் உயர் சாதியினர் மட்டுமே கல்வி கற்றார்கள். பகுத்தறிவு ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலையை மாற்றி பகுத்தறிவு தந்ததன் காரணமாக இன்று அனைத்து தரப்பு மக்களும் கல்வி கற்று தலை சிறந்து விளங்குகின்றனர். இந்தியாவில் உயர்கல்வி கற்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
அனைத்து பிரிவு மாணவிகளுக்கும் சமமான உயர்வான கல்வியைக் வழங்கும் உயரிய நோக்கத்தோடு தென் தமிழகத்தில் உருவான முதல் அரசு பெண்கள் கல்லூரி, தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இக்கல்லூரியில் ‘எங்கள் கல்லூரி” ‘ எங்கள் பெருமை” முன்னாள் மாணாக்கர்கள் சங்கத்தினை தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டங்களான "நான் முதல்வன்,” "புதுமைப் பெண்” மற்றும் "தமிழ்ப் புதல்வன்” ஆகியவற்றின் பயன்களை முழுமையாக மாணாக்கர்களுக்குச் சென்றடைய தேவையான அனைத்து பணிகளையும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். மேலும், கல்லூரிகளில் செயல்பட்டு வரும் போதை ஒழிப்புச் சங்கத்தின் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி தமிழ்நாடு "போதை இல்லா மாநிலமாக” விளங்கிட பேராசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.
மேலும், இங்கு பயின்று பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள முன்னாள் மாணாக்கர்களை கல்லூரியின் அங்கமாக இணைத்து இக்கல்லூரிக்கு தேவையான உதவிகளை பெறுவதற்கு இன்று தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க துவங்கவுள்ள சங்கம் வழிவகுக்கிறது. கல்லூரியின் தேவைகளையும் அதனை நிறைவேற்றித் தரக்கூடிய முன்னாள் மாணாக்கர்களையும் இணைக்கும் பாலமாக இச்சங்கம் இன்று உருவாக்கப்படுகிறது
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் எதிர்கால நலன் கருதி செயல்பட்டு வரும் நிறுவன மேலாண்மைக் குழுவினைக் கொண்டு கல்லூரிகளுக்கும் மாணாக்கர்களுக்கும் தேவையான நல உதவிகளை பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மாறிவரும் சமூக சூழலுக்கேற்ப மாணவிகளுக்கு உரிய கால இடைவெளியில் வல்லுநர்களைக் கொண்டு பாலின உளவியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தொடங்கப்பட்ட "முன்னாள் மாணாக்கர்கள் சங்கம்” தொடர்பான பணிகளை விரைந்து செயல்படுத்தி முன்னாள் மாணாக்கர்களைக் கொண்டு தங்களுடைய கல்லூரியினை மேலும் சிறப்பாக செயல்பட வைப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும். அரசின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு உறுப்பினர்களைக் கொண்டும் பிற துறை வல்லுநர்களைக்கொண்டும் இச்சங்கமானது நிர்வகிக்கப்பட்டு செயல்படுவதற்கான தொடக்கமாக இந்நிகழ்வு உள்ளது.
முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, இக்கல்லூரியில் பயின்று பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வரும் முன்னாள் மாணாக்கர்களைக் கொண்டு தற்போது பயிலும் மாணவியர்களுக்கு பல்வேறு பயிற்சிப் பட்டறைகளும், திறன் வளர்ப்புப் பட்டறைகளும், தொழில் முனைவோர் பயிற்சிகளும் சிறப்பாக துவங்க உள்ளது. மாணவியர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி நல்வழிப்படுத்தி அவர்களுடைய எதிர்காலத்தை மேன்மையடைய செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து இராணி அண்ணா மகளிர் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதியினையும் மற்றும் மாற்றுத்திறனாளி ஆய்வகத்தினையும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் நடைபெற்ற கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் 2021-2025 வரை தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகளின் மாணவர்களின் சேர்க்கை விவரங்கள், கடந்த மூன்று ஆண்டுகளின் மாணவர்களின் தேர்ச்சி விவரங்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் விவரங்கள், கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நலத்துறை விடுதிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், "நான் முதல்வன்,” "புதுமைப் பெண்” மற்றும் "தமிழ்ப் புதல்வன்” ஆகிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்துவது, போதை ஒழிப்புச் சங்கத்தின் செயல்பாடுகள், நிறுவன மேலாண்மைக் குழு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் பாலின உளவியல் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்கள்.
இக்கூட்டத்தில் திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பா.விக்டோரியா தங்கம், இணை இயக்குநர்கள் சிந்தியா செல்வி, லட்சுமி, மாநகராட்சி மண்டல குழுத்தலைவர் மகேஸ்வரி, இராணி அண்ணா மகளிர் கல்லூரி முதல்வர் சுமிதா, முக்கிய பிரமுகர்கள் ஜோசப் பெல்சி, சித்திக், பரமசிவஐயப்பன் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவியர்கள், முன்னாள் மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 97.98% எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்: ஆட்சியர் சுகுமார் தகவல்!
திங்கள் 1, டிசம்பர் 2025 12:43:02 PM (IST)

மகளிர் விடுதிக்குள் புகுந்து மனைவி வெட்டிக் கொலை : நெல்லை வாலிபர் வெறிச்செயல்!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:31:41 AM (IST)

நடைபயிற்சிக்கு சென்ற ஆசிரியர் வெட்டிக் கொலை: சிறுவன் உட்பட 2பேர் வெறிச்செயல்!
ஞாயிறு 30, நவம்பர் 2025 10:25:37 AM (IST)

நெல்லையில் தொடர் மழையால் மூழ்கிய பயிர்கள் : லட்சக்கணக்கில் சேதம் - விவசாயிகள் வேதனை!
சனி 29, நவம்பர் 2025 4:15:15 PM (IST)

பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் : அரசுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
வெள்ளி 28, நவம்பர் 2025 12:16:08 PM (IST)

கருமேனியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் சபாநாயகர் மு.அப்பாவு..!
வெள்ளி 28, நவம்பர் 2025 11:28:14 AM (IST)




