» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆந்திராவில் இருந்து கார், வேனில் கடத்தி வந்த ரூ.1¼ கோடி கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது!
திங்கள் 8, டிசம்பர் 2025 8:51:30 AM (IST)
ஆந்திராவில் இருந்து நெல்லைக்கு கார் மற்றும் வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.1¼ கோடி கஞ்சா சிக்கியது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கஞ்சா விற்பனைக்கு எதிராக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து நெல்லை மாவட்டத்துக்கு கஞ்சா கடத்தி வருவதாக தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு நெல்லை- மதுரை நான்குவழி சாலையில் நெல்லை அருகே பாளையங்கோட்டை பொட்டல் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு ஒரு லோடு வேனும், அதன்பின்னால் ஒரு காரும் வந்து கொண்டிருந்தது. போலீசார் சைகை காட்டி 2 வாகனங்களையும் நிறுத்த முயன்றனர். ஆனால் லோடு வேன் டிரைவர் மட்டுமே நிறுத்தினார்.
அதன் பின்னால் வந்த கார் நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்து உஷார்படுத்தினர். இதற்கிடையே லோடு வேன் டிரைவரை பிடித்து விசாரித்தபோது நெல்லை அருகே உள்ள தாழையூத்தை சேர்ந்த நிதிஷ்குமார் (26) என்பது தெரியவந்தது.
லோடு வேனை சோதனை செய்தபோது அதில் சுமார் 40 பார்சல்களில் 80 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் லோடு வேன், கார் என 2 வாகனங்களில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் நிதிஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் கங்கைகொண்டானை சேர்ந்த சுரேஷ்குமார் (25) மற்றும் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். நேற்று அதிகாலையில் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் சுந்தரி, சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரகுமார் மற்றும் போலீசார் தச்சநல்லூர் பகுதியில் இருதரப்பினர் மோதிய சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக நேற்று முன்தினம் இரவு சென்றனர்.
அப்போது அங்குள்ள கரையிருப்பு பகுதியில் கேரள பதிவெண் கொண்ட ஒரு கார் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருந்ததை பார்த்தனர். அதில் இருந்த நபர்கள் ஓடிவிட்டனர். காரின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததால் சந்தேகத்தின் பேரில் செல்போன் டார்ச் மூலம் பார்த்தனர். அப்போது காரில் ஏராளமான பார்சல்கள் இருந்தது. கார் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது, அதில் சுமார் 70 பார்சல்கள் இருந்தன.
தகவலின்பேரில் துணை கமிஷனர் பிரசன்னகுமார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். இதையடுத்து காரும், பார்சல்களும் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டுவரப்பட்டது. பார்சலை பிரித்து பார்த்தபோது சுமார் 140 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், இது கஞ்சா கடத்திய லோடு வேன் பின்னால் வந்த கார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த கேரள பதிவெண் கொண்ட நம்பர் பிளேட் போலியானது என தெரியவந்தது.
தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தச்சநல்லூர் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். ஒரே நாள் இரவில் நெல்லை மாநகர போலீசார் 140 கிலோ கஞ்சாவும், தூத்துக்குடி போதை பொருள் தடுப்புப்பிரிவு போலீசா் 80 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 20 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 5:52:35 PM (IST)

வெங்காடம்பட்டியில் இரு பெரும் விழா: 190 வது திருவள்ளுவர் சிலை திறப்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 3:21:48 PM (IST)

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்
சனி 6, டிசம்பர் 2025 10:26:05 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : ஆன்லைன் விளையாட்டால் சோகம்!!
சனி 6, டிசம்பர் 2025 8:37:08 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)


