» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழர்களின் தொன்மையை உலகறிய செய்யும் பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் பெருமிதம்!

ஞாயிறு 21, டிசம்பர் 2025 10:48:02 AM (IST)



நெல்லை பொருநை அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, ஆர்வமுடன் பார்வையிட்டார். 

தமிழ்நாட்டில் பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய தொல்லியல் தலங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அண்மைக்காலத்தில் அறிவியல் அடிப்படையில் அகழாய்வு பணி நடத்தியது.

இதில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களை உலகத்தமிழர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கண்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிந்துகொள்ளும் வகையில் நெல்லை பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் 54,296 சதுர அடி பரப்பளவில் பொருநை அருங்காட்சியகம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவில் திறந்து வைத்தார். ஒரே இடத்தில் ‘பொருநை ஆற்றங்கரை நாகரிகம்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் தொல்பொருட்களை நவீன வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியக காட்சி அரங்கில் இரும்பின் தொன்மை காட்சிக்கூடம், முதுமக்கள் தாழி காட்சிக்கூடம், வாழ்விட பகுதி காட்சிக்கூடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பேட்டரி காரில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆர்வமுடன் பார்வையிட்டார்.

இதுதவிர ஆங்காங்கே மரங்கள், குறுஞ்செடிகள், இவற்றுடன் கண்கவர் நீர்த்தடாகம், கலைகளைக் காணும் திறந்தவெளி அரங்கம், தொல்லியல் மாதிரிகள் மற்றும் உள்ளூர் கைவினைப்பொருட்களின் விற்பனையகம், மின்கலத்தால் இயங்கும் வாகனம், பொதுமக்கள் செல்ல எளிதான நடைபாதை, இயற்கையை ரசிக்க குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், இளைப்பாற ஆங்காங்கே இருக்கைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இதனையும் பார்வையிட்டார்.

மேலும், முதுமக்கள் தாழிகள், இரும்பாலான கருவிகள், படையல் பானைகள், மண்கலன்கள், குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் போன்ற தொல்பொருட்கள், ஆதிச்சநல்லூரில் அன்றைய நீர் மேலாண்மையை எடுத்துரைக்கும் சுடுமண்ணாலான வகையில் 21 எண்ணிக்கை கொண்ட உருளைக்குழாய்கள், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் கிடைக்கப்பெற்றுள்ள அதிக அளவிலான உயர்தர வெண்கலம் மற்றும் தங்கத்தினாலான பொருட்களை பார்வையிட்ட அவற்றின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், எம்.பி.க்கள் கனிமொழி, ராபர்ட் புரூஸ், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொல்லியல் ஆணையர் உதயச்சந்திரன், அருங்காட்சியகங்கள் துறை இயக்குனர் கவிதா ராமு, நெல்லை கலெக்டர் சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழர்களின் தொன்மையை உலகறிய செய்யும் வகையில் நெல்லை பொருநை அருங்காட்சியகம் அமைந்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இதுகுறித்து அவர் காணொலிக்காட்சி மூலம் பேசியதாவது: எல்லோருக்கும் என்னுடைய அன்பான தமிழ் வணக்கம்! தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக, உங்கள் எல்லோரையும் திருநெல்வேலி நோக்கி அழைக்க தான் இந்த வீடியோ!

வரலாற்றை தெரிந்து கொள்வதும், மீட்டெடுப்பதும் எதற்காக? வெறும், பழம்பெருமையை பேசி, அதில் மனநிறைவு அடைவதற்காகவா? இல்லை! நாம் வந்த பாதையை தெரிந்து கொண்டு, எதிர்காலத்தில் இன்னும் முற்போக்காக, இன்னும் பரந்த மனப்பான்மையோடு வளர்வதற்கான தேடல் அது! இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் எழுதப்பட வேண்டும் என்று தொடர்ந்து நான் சொல்லி கொண்டு வருகிறேன்.

இது ஏதோ தற்பெருமைக்காகவோ, மேடை அலங்காரத்துக்காகவோ பேசிய வெற்றுப்பேச்சு இல்லை. அறிவியல்பூர்வமான உண்மை இது என்று நம் திராவிட மாடல் அரசு தொடர்ந்து மெய்ப்பித்துக்கொண்டு வருகிறோம்.

மதுரைக்கு பக்கத்தில் கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகளைக் கொண்டு கீழடி அருங்காட்சியகத்தை மிகவும் கம்பீரமாக உருவாக்கி இருக்கிறோம். அடுத்ததாக, திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறேன்.

பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தில் நுண் கற்கருவிக் காலம் தொடங்கி, இரும்புக் காலம், தொடக்க வரலாற்று காலம் என தொடர்ச்சியாக வரலாற்றுத் தடயங்கள் பொருநை ஆற்றங்கரை பகுதிகளில் ஏராளமாக கிடைக்கின்றன.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், சங்ககாலத் துறைமுக நகரமான கொற்கையை பற்றி, சங்க இலக்கியங்களில் முழுமையாக பார்க்கலாம். ‘தாலமி', ‘பிளினி' போன்ற அயல்நாட்டவர்களும் இதுபற்றி நிறையவே எழுதி இருக்கிறார்கள்.

கொற்கையில் கிடைக்கக்கூடிய முத்துக்களைப் பற்றி சிறப்பாக குறிப்பிடுகிறார்கள். அதேபோல ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற இடங்களில், இரும்புக் காலத்தை சார்ந்த புதைப்பிட பகுதிகளும், மக்கள் வாழ்விட பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை உலகுக்கு கொடையாக கொடுத்த ராபர்ட் கால்டுவெல், 1876-ம் ஆண்டிலேயே கொற்கையை ஆய்வு செய்ததோடு, சிறிய அளவில் அகழாய்வும் செய்தார்.

அதேபோல, ஜாகர்- அலெக்ஸாண்ட்ரே 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்திருக்கிறார். தமிழர் பண்பாட்டின் தொன்மையையும் சிறப்பையும் உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் முயற்சியில் நம் அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. பொருநை ஆற்றங்கரையின் முக்கியமான இடங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை விரிவாக நடத்திய அகழாய்வுகளில், ஏராளமான சான்றுகள் வெளியே கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

ஆதிச்சநல்லூர், சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் வெண்கலம், தங்கம், செம்பு, இரும்பு என்று பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட தொல்பொருட்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

இதில் குறிப்பாக, இரும்பை உருக்கி கருவிகளை செய்யும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில்தான் சிறப்பாக இருந்திருக்கிறது. தொல்லியல் அகழாய்வுகளில் இதுவரை கிடைத்த இரும்பு பொருட்களிலேயே, காலத்தால் முந்தைய இரும்பு சிவகளையில் கிடைத்த இரும்புதான் என்பதும் அறிவியல் அடிப்படையிலான காலக்கணிப்பு முடிவுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

உலகின் தலைசிறந்த ஆய்வறிஞர்கள் முன்னிலையில் இந்த அறிவிப்பை ஜனவரி 2025-ம் ஆண்டு நான் உலகிற்கு வெளியிட்டேன். பொருநை ஆற்றங்கரை அகழாய்வுகளில் கிடைத்த தொல் பொருட்கள் இந்த பகுதியிலேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தப்படும் என்று அறிவித்து, அந்தப் பணிகள் நிறைவடைந்து இப்போது பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது.

மின் விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலிக்கின்ற பொருநை அருங்காட்சியகத்தின் டிரோன் காட்சிகளை உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நான் திறந்து வைத்த கீழடி அருங்காட்சியகத்தை, கடந்த நவம்பர் மாதம் வரை 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் உலகெங்கும் இருந்து வந்து பார்த்திருக்கிறார்கள்.

நேரில் வர முடியாதவர்களும் இருந்த இடத்திலிருந்தே, இணையவழி மூலமாக கீழடி அருங்காட்சியகத்தை விர்ச்சுவலாக சுத்திப் பார்க்க ‘மெய்நிகர் இணையவழி சுற்றுலா'வை உருவாக்கி கொடுத்திருக்கோம். இப்போது பொருநை அருங்காட்சியமும் 55 ஆயிரம் சதுர அடியில் மரபார்ந்த வடிவமைப்போடு, அதே நேரத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

டிஜிட்டல் முறையில் உருவகப்படுத்தப்பட்ட இரும்பு உருக்கு செயல்முறை, ‘5-டி’ முறையில் தமிழ் நிலங்களின் வழியாக உணர்வுப் பயணம், பாண்டி விளையாட்டு, தரை ஒளிபடக் காட்சி, தொல்லியல் வரலாற்றுப் பின்புலம் குறித்த டாக்குமெண்டரி படம், மெய்நிகர் படகு அனுபவ உருவகம், ஆற்றுப் பள்ளத்தாக்கு நாகரிகங்களின் தொடுதிரை காட்சி, கருவிகளை உருவாக்கும் ஊடாடு சுவர் (அதாவது இண்டராக்டிவ் வால்), டிஜிட்டல் பீட்பேக் மையம், பொருநையின் குரல் பயணம் போன்ற ஏராளமான நவீன தொழில்நுட்ப அனுபவங்களை இங்கே நீங்கள் பெறலாம்!

தமிழர்களின் தொன்மையை, தமிழர்களின் நாகரிக மேன்மையை இந்த தலைமுறையினருக்கு மட்டுமல்ல, ஜென்-சீ உள்ளிட்ட அடுத்தடுத்த தலைமுறைக்கும் எடுத்து கொண்டு போக வேண்டும் என்று பார்த்து பார்த்து இவ்வளவும் செய்திருக்கிறோம்.

இந்த பொருநை அருங்காட்சியகம் தமிழர்களின் தொன்மையை உலகறிய செய்யும். என்னுடைய இந்த எண்ணம் ஈடேற நீங்கள் எல்லோரும் உங்கள் குடும்பங்களோடு கீழடி அருங்காட்சியகத்திற்கும், பொருநை அருங்காட்சியத்திற்கும் அணி அணியாக வர வேண்டும் என்று அன்போடு, உரிமையோடு அழைக்கிறேன்.

நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும். அதற்கான நம் அரசின் முயற்சிக்கு உங்கள் ஆதரவு வேண்டும். கீழடி, நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! என்று உரக்கச் சொல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory