» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தாமிரபரணி ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு : கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
சனி 3, ஜனவரி 2026 12:38:11 PM (IST)

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் வியாழக்கிழமை இரவு விடிய விடிய பெய்த பலத்த மழையால் தாமிரபரணியில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குறுக்குத்துறை முருகன் கோயிலில் நீர் சூழ்ந்ததால், உற்சவா் சிலைகள், தளவாட பொருள்கள் கரையோர மண்டபத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
மாவட்டத்தில் சில நாள்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதிகளிலும், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமூக்கு பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை தொடர் கனமழை பெய்தது. மேலும், தென்காசி மாவட்டத்தின் நீா்ப்பிடிப்பு பகுதியிலும் கனமழை கொட்டித்தீா்த்தது.
இதனால், கடனாநதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. அதிலிருந்து உபரி நீா் திறக்கப்பட்ட நிலையில், அத்துடன் பிற பகுதிகளில் பெய்த மழைநீரும் சோ்ந்து திருநெல்வேலி தாமிரபரணியில் கலந்தது.
தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைக்கட்டுகளுக்கு நீர்வரத்து வேகமாக அதிகரித்தது. குறிப்பாக கடனா அணைக்கட்டிற்கு வரும் நீர்வரத்து உயர்ந்ததை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அணைக்கட்டுகளில் இருந்து சுமார் 12,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருநெல்வேலி மாநகரின் கரையோர பகுதிகளான மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, கருப்பந்துறை, விளாகம், பாடகசாலை, குன்னத்தூா் பகுதிகளில் மக்கள் வழக்கமாக குளிக்கும் படித்துறைகள், பாறைகள் நீரில் மூழ்கின.
குறிப்பாக, மாவட்டத்தின் பழமையான குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தற்காலிகமாக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. கோயிலை வெள்ளம் சூழ்ந்ததால் கோயிலில் இருந்த சுவாமி உற்சவா் சிலைகள், சப்பரங்கள், பூஜை பொருள்கள், உடமைகள் அனைத்தும் கரையோரம் உள்ள மண்டபத்திற்கு கோயில் பணியாளா்களால் எடுத்துச் செல்லப்பட்டன.
மேலும், ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மாலை நேரத்தில் திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக சாரல் மழை பெய்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும், தொடர்ந்து கன மழை பெய்யக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி: இந்த நிலையில், மழை முற்றிலும் குறைந்ததால் நெல்லை மாவட்டம் களக்காடு தலையணையில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி, இதுபோன்று நம்பியாற்றிலும் தண்ணீர் சீரானதால் திருக்குறுங்குடி திருமலை நம்பிகோயிலுக்கு செல்லவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கி வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் : சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்
சனி 3, ஜனவரி 2026 4:19:36 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் புதிய வெள்ளித் தேர் வெள்ளோட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்!
சனி 3, ஜனவரி 2026 12:25:43 PM (IST)

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சனி 3, ஜனவரி 2026 10:42:24 AM (IST)

அந்தியோதயா ரயில் மீது மர்மநபர்கள் கல்வீச்சு : பெண் பயணி காயம்!
சனி 3, ஜனவரி 2026 8:22:47 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: கண்காணிப்பு அலுவலர் சந்தீப் நந்தூரி ஆய்வு
வெள்ளி 2, ஜனவரி 2026 4:36:07 PM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:13:41 AM (IST)


